கோலாலம்பூர்:
இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் பல்வேறு குற்றச் செயல்களுக்காக 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,207 மலேசியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, நாடாளுமன்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துபூர்வ பதிலில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
அவ்வாறு பிடிபட்ட மலேசியர்களின் உரிமைகளையும் நல்வாழ்வையும் பாதுகாப்பதற்காக அந்நாடுகளிலுள்ள மலேசியத் தூதரகங்கள் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
கைதானவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்தல், சட்ட உதவி பெறும் நோக்கில் சட்ட நிறுவனங்களின் பட்டியல் பகிர்வு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
மேலும், நீதிமன்ற விசாரணைகளில் பங்கேற்பது, கைதானோருக்கு அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து பணம் அனுப்புவதற்கு வழிவகை செய்வது, தடுத்து வைக்கப்பட்ட நிலையங்களுக்கு அவ்வப்போது சென்று பார்த்து வருவது என மேலும் பல நடிவடிக்கைகளை மலேசியத் தூதரகங்கள் எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் கைதானவர்கள் பற்றிய தரவுகள் குறித்தும் அவர்களை மீட்டு மலேசியாவிற்கு அழைத்துவர அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் குறித்தும் மேலவை உறுப்பினர் சி. சிவராஜ் கேட்டிருந்தார்.
கைதானவர்களை நாடுகடத்துவது தொடர்பில் புருணை, ஈரான், உக்ரேன் ஆகிய நாடுகளுடன் இருதரப்பு உடன்பாடு செய்துகொண்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.