பேங்காக் ஹோட்டலில் தீச்சம்பவம்; வெளிநாட்டவர்கள் மூவர் மரணம்

பேங்காக்:

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) இரவு தீ மூண்டதைத் தொடர்ந்து வெளிநாட்டவர்கள் மூவர் உயிரிழந்தனர். இதில் காயமுற்ற எழுவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆறு மாடிக் கட்டடமான ஏம்பர் ஹோட்டலின் ஐந்தாவது தளத்தில் தீ மூண்டதாக பேங்காக்கின் தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்தது. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், ஆடவர்கள் இருவர் இறந்துவிட்டது மருத்துவமனையில் உறுதிசெய்யப்பட்டது.

இறந்தவர்கள் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதை அதிகாரிகள் இன்னும் கண்டறிந்துவருகின்றனர்.

மதுபானக் கூடங்களுக்கும் விடுதிகளுக்கும் பெயர்போன காவ் சான் பகுதிக்கு அருகே அந்த ஹோட்டல் உள்ளது.

அந்த ஹோட்டலில் 75 பேர் இருந்ததாகவும் அவர்களில் 34 பேர் மேற்கூரையிலிருந்து மீட்கப்பட்டதாகவும் பேங்காக் ஆளுநர் சட்சார்ட் சித்திபுண்ட் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அவர் சொன்னார்.

இந்நிலையில், ஹோட்டல்களிலும் கேளிக்கைக் கூடங்களிலும் தீ விபத்து ஏற்படும்போது அங்கிருந்து வெளியேறுவதற்கான பாதைகளைச் சோதிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here