ஜோகூர் பாரு:
இன்று புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் மசாயில் உள்ள தொழிலாளர் குடியிருப்பு ஒன்றில் ஜோகூர் குடிநுழைவுத் துறை அமலாக்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் 105 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
‘Ops Sapu’ என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட மற்றும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை இலக்காகக் கொண்ட இந்த நடவடிக்கையில், மொத்தம் 454 நபர்கள் ஆய்வு செய்யப்பட்டனர், அதில் 105 பேர் குடியேற்றச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டது.
புலம்பெயர்ந்தோரை தங்கள் சொந்த நாடுகளுக்கு தானாக திரும்ப செல்ல அனுமதிக்கும் வகையில் இதுவரை அமலில் இருந்து நேற்று (டிசம்பர் 31, 2024) காலாவதியான, புலம்பெயர்ந்தோர் திருப்பி அனுப்பும் திட்டத்தில் அவர்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்பட்டது என்று ஜோகூர் குடிநுழைவுத்துறை இயக்குனர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் தாருஸ் கூறினார்.
“இப்போது காலக்கெடு முடிந்துவிட்டதால், குடியேற்ற சட்டத்தை பாதுகாக்கும் பொருட்டு அதற்கு எதிராக தீவிர அமலாக்கத்துடன் கூடிய சோதனை தொடரும் என்று அவர் மேலும் கூறினார்.
எனவே ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை வேலைக்கு அமர்த்தும் அல்லது அடைக்கலம் கொடுக்கும் முதலாளிகள், வளாக உரிமையாளர்கள் அல்லது தனிநபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.