அம்பேத்கர் தொடர்பான 5 இடங்கள்: ‘பஞ்ச தீர்த்தமாக’ அறிவித்தது இந்திய அரசு

அம்பேத்கரை வைத்து தான் சட்டம் மட்டுமல்ல, அரசியலும் நகர்கிறது. அம்பேத்கர் தனக்கு மட்டுமே சொந்தம் என்பதுபோல, பொங்கிவரும் காங்கிரஸ், தனது ஆட்சி காலத்தில் அம்பேத்கரின் பிறப்பிடம் முதல் இறப்பிடம் வரை அவர் தொடர்புடைய இடங்களை கண்டுகொண்டதே இல்லை. அரசியலுக்காக மட்டுமே அம்பேத்கரை பயன்படுத்திக்கொண்டு இப்போது அவருக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறது.

ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு 2014ல் பொறுப்பேற்றதும், பல்வேறு திட்டங்களை அம்பேத்கர் புகழை காப்பதற்கும் பரப்புவதற்கும் செயல்படுத்தியுள்ளது. 2015ம் ஆண்டு ஜனவரி 31ல் டில்லி ஜன்பத் சாலையில், ‘அம்பேத்கர் சர்வதேச மையம்’ அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

இம்மையத்தை 2017, டிசம்பர் 7ல் அவர் திறந்து வைத்தார். அந்த திறப்பு விழாவில், அம்பேத்கர் தொடர்புடைய 5 முக்கிய இடங்களை மேம்படுத்தி, புண்ணிய ஸ்தலங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார்.

சொன்னபடியே, அம்பேத்கர் பிறந்த இடமான மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள மோவ் பகுதி (ஜனம் பூமி), லண்டன் நகரில் அவர் படித்த இடம் (சிக்ஷா பூமி), மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அவர் புத்த மதத்தை தழுவிய இடம் (தீக்ஷா பூமி), டில்லியில் அவர் மறைந்த இடம் (மகாபரிநிர்வான் பூமி), மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் அவர் உடல் தகனம் செய்யப்பட்ட இடம் (சயித்யா பூமி) ஆகிய 5 இடங்களையும் புண்ணியஸ்தலங்களாக மேம்படுத்தி நினைவிடமாக அமைத்துள்ளது மத்திய பா.ஜ., அரசு.

இவை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிலையில், தற்போது இந்த தகவல்கள் மீண்டும் வைரலாகி வருகின்றன. பார்லிமென்டில் அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித்ஷா இழிவுபடுத்தியதாக அரசியல் செய்து, பார்லி., கூட்டத்தையே முடக்கிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பா.ஜ., அரசு அம்பேத்கருக்கு செய்த விஷயங்களை தங்களுக்கு வசதியாக மறைத்துவிட்டன.

இவ்வளவு கூப்பாடு போடும் காங்கிரஸ், தனது ஆட்சிக் காலத்தில் அம்பேத்கரை என்ன பாடுபடுத்தியது என்பதை சற்று பின்னோக்கி பார்க்க வேண்டும்.

இந்திய அரசியல் சாசனத்தை எழுதும் கமிட்டிக்கு தலைவராக இருந்தவர் அம்பேத்கர். அப்போதெல்லாம் அவரை ஆதரிப்பது போல் ஆதரித்த காங்., அரசியல் சாசனம் எழுதப்பட்ட பிறகு, அவரை கைகழுவி விட்டது.

அம்பேத்கர் 1952ல் நடந்த முதல் பொதுத்தேர்தலில் பம்பாய் (வடக்கு) தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஒரு வேட்பாளரை நிறுத்தி அம்பேத்கரை தோற்கடித்தார் நேரு. அடுத்து மீண்டும் 1954ல் பந்த்ரா தொகுதி இடைத்தேர்தலில் அம்பேத்கர் போட்டியிட்டு காங்., வேட்பாளரிடம் தோற்றார். (இதற்கிடையே 1952 – 1956 வரை பம்பாய் மாகாண ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்). அம்பேத்கர் லோக்சபாவுக்கு வரக்கூடாது என்பதற்காகவே அவரை தோற்கடித்தார் அன்றைய பிரதமர் நேரு. ஒரு அரசியல் சாசன நிபுணர் ஜெயிக்கட்டுமே என துளி கூட நேரு நினைக்கவில்லை.

தனது ஆட்சிக்காலத்தில் அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது கொடுக்க வேண்டும் என்றும் காங்., நினைக்கவில்லை. அதை செய்ததும் பாஜ ஆதரவுடன் 1990ல் பிரதமராக இருந்த வி.பி.,சிங் தான்.

அம்பேத்கருக்கு இப்போதைய மத்திய அரசு எதுவும் செய்யாதது போலவும் அம்பேத்கரையே தாங்கள் தான் மொத்தக் குத்தகைக்கு எடுத்தது போலவும் எதிர்க்கட்சிகள் ‘போராட்ட நாடகம்’ ஆடியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் சதி வேலையை அம்பலப்படுத்துவது போல் அம்பேத்கருக்கு பாஜ அரசு ஆற்றிய பணிகள் இப்போது வைரலாகி வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here