(டில்லிராணி முத்து)
பாகான் டத்தோ:
பாகான் டத்தோ பகுதியில் அமைந்துள்ள சுல்தான் நஸ்ரின் ஷா பாலத்தில் நேற்று அடுத்தடுத்து நிகழ்ந்த இரு தனித்தனி சம்பவங்கள், அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.
பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படும் மூவர் தொடர்பான சம்பவத்தில், 42 வயதான ஆண் ஒருவர் மற்றும் 2 வயது சிறுவன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், ஒரு பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என பேராக் மாநில மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் டத்தோ சயானி சைடுன் கூறினார்.

முதல் சம்பவம் நேற்று காலை 11.36 மணியளவில் பதிவானது. பாலத்தின் நடுப்பகுதியில் இருந்து 42 வயதான முகமட் நூர் பெர்டாவுஸ் பின் முகமட் மொக்தார் ஆற்றில் விழுந்ததாக காவல்துறையிடமிருந்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, ஊத்தான் மெலிந்தாங் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
நண்பகல் 12.11 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த மீட்புக் குழுவினர், பாலத்தின் ஓரத்தில் பாதிக்கப்பட்டவருக்குச் சொந்தமான மோடெனாஸ் Z15 GT ரக மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டனர்.

இதையடுத்து, தீயணைப்புத் துறையின் அலுமினிய மீட்புப் படகுகள், மலேசிய குடிமைப் பாதுகாப்புப் படையின் படகு மற்றும் பிற மீட்புக் குழுக்கள் இணைந்து, பாதிக்கப்பட்டவர் விழுந்ததாகக் கருதப்படும் இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் சுற்றளவில் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
பலத்த நீரோட்டம் காரணமாக நீரில் மூழ்கி தேடும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை நிலவியதால், மேற்பரப்பில் தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது என்று டத்தோ சயானி தெரிவித்தார்.
இதற்கிடையில், நேற்று மாலை 7.15 மணியளவில் அதே பாலத்தின் மற்றொரு பகுதியில் இருந்து 38 வயதான சீனப் பெண் லிம் லி யின் மற்றும் அவரது இரண்டு வயது மகன் வோங் லோங் ஹீ ஆற்றில் விழுந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று நீரில் மிதந்துகொண்டிருந்த பெண்ணை உயிருடன் மீட்டு, அவருக்கு உடனடியாக இதய-நுரையீரல் புத்துயிர் சிகிச்சை (CPR) அளிக்கப்பட்டு, மலேசிய குடிமைப் பாதுகாப்புப் படை ஆம்புலன்ஸ் மூலம் பாகான் டத்தோ சுகாதார நிலையத்திற்கும் பின்னர் தெலுக் இந்தான் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது. இதேவேளை, அவருடன் காணாமல் போன இரண்டு வயது சிறுவனைத் தேடும் பணி இரவு முழுவதும் தொடர்ந்தது.
இரவு நேரத்தில் நிலவிய மோசமான வானிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் தேடுதல் நடவடிக்கை இரவு 8.30 மணியளவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, இன்று காலை 8.00 மணிக்கு மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முதல் காணாமல் போயிருந்த முகமட் நூர் பெர்டாவுஸ் இன்று காலை 11.59 மணியளவில், அவர் ஆற்றில் விழுந்ததாகக் கருதப்படும் இடத்திலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் மிதந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், 2 வயது சிறுவன் வோங் லோங் ஹீயும் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டார்.
சிறுவனின் உடல், பாலத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டதாக டத்தோ சயானி மேலும் தெரிவித்தார்.

பின்னர் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக அவரது உடல் மலேசிய காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் உடற்கூராய்வு நடவடிக்கைகளுக்காக தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஊத்தான் மெலிந்தாங், தெலுக் இந்தான், பாகான் டத்தோ தீயணைப்பு நிலைய வீரர்கள், காவல்துறை, மலேசிய குடிமைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து செயல்பட்டன என்றும் டத்தோ சயானி குறிப்பிட்டார்.


















