போபால் விஷவாயு ஆலை கழிவுகள் அகற்றம்!: 40 ஆண்டுகளுக்கு பின் நடவடிக்கை

போபால்:

மத்திய பிரதேசத்தில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய போபால் விஷவாயு கசிவு நடந்து 40 ஆண்டுகளுக்கு பின், ஆலையில் உள்ள 3 லட்சத்து 77,000 கிலோ அபாயகரமான கழிவுகள் வேறு இடத்துக்கு பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.

மத்திய பிரதேசத்தின் போபாலில், ‘யூனியன் கார்பைடு’ பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலையில், 1984 டிச., 23ல் விஷயவாயு கசிவு ஏற்பட்டது. மிகவும் கோரமான இந்த சம்பவத்தில், 5,479 பேர் உயிரிழந்தனர்.

இதைத் தவிர, ஊனம் அடைந்தது, நிரந்தர சுகாதார பிரச்னைகளால், ஐந்து லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மூடப்பட்டுள்ள இந்த ஆலையில் உள்ள, 3 லட்சத்து 77,000 கிலோ கழிவுகளை அகற்றுவது தொடர்பான பிரச்னை நீண்டகாலமாக இருந்து வந்தது.

இதை விசாரித்த ம.பி., உயர் நீதிமன்றம், மாநில அரசு சரியான நடவடிக்கை எடுக்காததற்கு கண்டனம் தெரிவித்து, உடனடியாக அந்த கழிவுகளை அகற்றி, அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க சமீபத்தில் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, போபாலில் இருந்து 250 கி.மீ., தொலைவில் இந்துாருக்கு அருகே தார் மாவட்டத்தின் பீதாம்புரில் உள்ள கழிவுகளை மறுசுழற்சி செய்யும் மையத்துக்கு கொண்டு சென்று கழிவுகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் கடந்த மாதம் 29ல் துவங்கியது. இந்த கழிவுகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்காக, பல பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய 12 டிரக்குகள், போபால் ஆலைக்கு வந்தன.

முழு கவச உடை அணிந்த போபால் மாநகராட்சி, சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளிட்டவற்றின் அதிகாரிகள் முன்னிலையில், கழிவுகளை அகற்றும் பணி துவங்கியது. இந்த கழிவுகளை அகற்றும் பணியில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். முறையான மருத்துவ பரிசோதனைகளுக்கு பின் கழிவுகளை அகற்ற துவங்கினர். 30 நிமிடங்களுக்கு ஒருமுறை அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்தன.

போபால் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து, 3 லட்சத்து 77,000 கிலோ கழிவுகளை ஏற்றிக் கொண்டு, 12 டிரக்குகள் நேற்று முன்தினம் இரவு 9:00 கிளம்பி, பலத்த பாதுகாப்புடன், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு அந்த டிரக்குகள் பீதாம்புர் சென்றடைந்தன. அவை, கழிவுகள் மறுசுழற்சி ஆலை வளாகத்திற்குள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எல்லாம் திட்டமிட்டபடி சரியாக நடந்தால், அபாயகரமான கழிவுகள் மூன்று மாதங்களில் முற்றிலுமாக அழிக்கப்படும். இல்லையெனில் ஒன்பது மாதங்கள் வரை ஆகும் என்று போபால் விஷவாயு சம்பவத்திற்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பிரிவின் இயக்குனர் சுவதந்திர குமார் சிங் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here