மெல்போர்ன்-
பிரபல டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிக் 2021 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஒரு ஹோட்டல் அறையில் ஆஸ்திரேலியா அரசால் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். அப்போது அவரது விசா தொடர்பாக ஒரு வழக்கு நடைபெற்று வந்தது. அப்போது அந்த ஹோட்டலில் தனக்கு விஷம் அளிக்கப்பட்டதாக நோவாக் ஜோகோவிக் கூறி இருக்கிறார்.
இந்த தகவல் விளையாட்டு உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. அந்த தொடருக்கு முன்னதாக உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிக் ஆஸ்திரேலியா செல்ல சிறப்பு விசாவுக்கு விண்ணப்பித்து இருந்தார்.
அவருக்கு அதற்கு சில வாரங்களுக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அதனால் தனக்கு மட்டும் சிறப்பு விசா வழங்குமாறு அவர் விண்ணப்பித்து இருந்தார். அதை பயன்படுத்தி அவர் ஆஸ்திரேலியாவுக்கும் சென்றார். ஆனால், அவர் கொரோனாவுக்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவில்லை என்பதால் ஆஸ்திரேலிய அரசு அவரை மீண்டும் செர்பியாவுக்கு அனுப்ப முடிவு செய்தது.
இதனிடையே நோவாக் ஜோகோவிக் விசாவை ரத்து செய்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு முடியும் வரை அவரை ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் அடைத்து வைத்தது ஆஸ்திரேலிய அரசு. மெல்போர்னில் தான் அவர் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார்.
அப்போது அங்கு ஹோட்டல் அறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவில் கடினமான உலோகங்கள் சேர்க்கப்பட்ட உணவு அளிக்கப்பட்டதாக அவர் தற்போது கூறி இருக்கிறார். இது பற்றி நோவாக் ஜோகோவிக் பேசுகையில், “அப்போது எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மெல்போர்ன் ஹோட்டல் அறையில் வழங்கப்பட்ட உணவில் விஷம் இருந்ததாக நான் உணர்ந்தேன். நான் செர்பியாவுக்கு திரும்பிய பின் அது பற்றி தெரிந்து கொண்டேன்.”
“இதுவரை நான் இதை வெளி உலகில் யாரிடமும் இதை பகிர்ந்து கொள்ளவில்லை. அப்போது எனது உடலில் கடினமான உலோகங்கள் இருந்ததை கண்டுபிடித்தேன். லீட் (Lead) மற்றும் மெர்க்குரி (Mercury) ஆகியவை அதிக அளவில் எனது உடலில் இருந்தன. அதனால் நான் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு சென்றபோது பதற்றம் அடைந்தேன்.” என்று கூறி இருக்கிறார். தற்போது நோவாக் ஜோகோவிக் 2025 ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.