2022 முதல் பாலியல் தொல்லை சம்பவங்கள் அதிகரிப்பு; நான்சி கவலை

கோலாலம்பூர்:

கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து மலேசியாவில் பாலியல் தொல்லைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் நான்சி ‌ஷுக்ரி தெரிவித்துள்ளார்.

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சரான அவர், 2024ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் காவல்துறைக்கு பாலியல் தொல்லை தொடர்பில் கிடைத்த சம்பவங்களின் எண்ணிக்கை 666ஆக இருந்ததாக கூறினார்.

மேலும் கடந்த 2023ஆம் ஆண்டில் பதிவான 529 சம்பவங்களைக் காட்டிலும் அது அதிகமாகியிருந்தது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களும் அடங்குவர். மேலும் பாலியல் தொல்லைக்கு எதிரான தீர்ப்பாயத்தில் பாலியல் தொல்லை குறித்து 28 புகார்கள் செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார். அவற்றில் பத்துப் புகார்கள் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார்.

இன்று சிபு ஜெயா சமூக மண்டபத்தில், ‘சமூக அன்பு, பாலியல் தொல்லைக்கு எதிரான ஆதரவுத் திட்டத்தை’ தொடங்கிவைத்து உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.

மகளிர் மேம்பாட்டுத் துறை மூலம், தமது அமைச்சு பொதுமக்களிடம் பாலியல் தொல்லைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த கடப்பாடு கொண்டுள்ளதாக கூறிய அவர், பாலியல் தொல்லை குறித்த விழிப்புணர்வை அதிகரித்து, பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவது திட்டத்தின் நோக்கமாகும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here