(எம்.எஸ். மலையாண்டி)
மலேசியாவில் வாழ்க்கைச் செலவின உயர்வு என்பது அனைத்து மக்களையும் தற்போதைய சூழலில் வெகுவாகப் பாதித்திருக்கிறது. உணவு விலை தொடங்கி மற்ற செலவினங்களும் பலமடங்கு அதிகரித்து விட்டன. இதனால் குடும்பங்களின் செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு சாமானிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்க பல குடும்பங்கள் திணறிக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. மக்களுக்கு உதவும் வகையில் இரட்டை வியூகங்களைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் அறிமுகம் செய்திருக்கிறது.
அவற்றுள் ஒன்று உடனடி நிவாரண உதவி. இன்னொன்று நீண்டகால அடிப்படையிலான சீர்திருத்தம். மக்களின் நிதி நிலைமையைச் சீர்படுத்தும் நோக்கத்தில் இவை கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இந்த வியூகங்கள் வாயிலாக மக்களின் நிதிச் சுமையைக் குறைக்க முடியும் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கை. பொருளாதாரரீதியாகவும் அவர்கள் நிலைமையைச் சமாளித்துக்கொள்ள முடியும் என்றும் கருதப்படுகிறது.
மக்களுக்கு உதவும் வகையில் மடானி அரசாங்கம் ரொக்கப் பண உதவித் திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. எஸ்டிஆர் எனப்படும் ரஹ்மா ரொக்கப்பன உதவி, சாரா எனப்படும் ரஹ்மா அடிப்படை உதவித்திட்டம் போன்ற திட்டங்களும் அவற்றுள் அடங்கும். இந்தத் திட்டங்களுக்காக 13 பில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் ஒதுக்கி இருக்கிறது.
மலேசியாவில் உள்ள பெரியவர்களுள் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினருக்கு அதாவது 90 லட்சம் மலேசியர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ரொக்கப்பண உதவி வழங்கப்படுகிறது. எஸ்டிஆர் உதவித்திட்டத்தின் இன்னொரு பகுதியான சாரா திட்டத்தின் கீழ் 41 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் 100 ரிங்கிட் வழங்கப்படுகிறது. இதனைக் கொண்டு அவர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொள்ள முடிகிறது.
அதிகரித்து வரும் வாழ்க்கைச் செல்வினங்களைச் சமாளிப்பதற்கு இதுபோன்ற உதவித்திட்டங்கள் நீண்டகால அடிப்படையில் தீர்வாக அமையப்போவதில்லை என்பதை நிபுணர்களும் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
வாங்கும் சக்தியை வலுப்படுத்தக்கூடிய வகையில் ரொக்கப்பண உதவித் திட்டங்கள் கொண்டு வரப்பட்டாலும் அதன்மூலம் உற்பத்தித் திறன் உயரப்போவதில்லை என்பதையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும். இதனால் பொருட்களின் விலை உயரும். அதன் நேரடித் தாக்கமாக பணவீக்க மும் அதிகரிக்கும்.
ஏற்கெனவே பிரிம் எனப்படும் ஒரே மலேசியா மக்கள் உதவித்திட்டம் இருந்தது. அது பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் பல படிப்பினைகளைக் கற்றுக்கொள்ளவும் முடிந்தது.
முறையான சீர்திருத்தத் திட்டங்கள் இன்றியும் உற்பத்தித் திறனை வலுப்படுத்தக்கூடிய வியூகம் இன்றியும் குறுகியகால ரொக்கப் பண உதவித்திட்டங்கள் நீண்டகால அடிப்படையில் நிச்சயம் ஒரு தீர்வை ஏற்படுத்தப்போவதில்லை என்பதைக் கடந்தகால வரலாறு நிரூபித்திருக்கிறது.
ஆக வே ஆள்பலத்துறையில் ஆற்றல்களை வலுப்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் ஆற்றலை மேம்படுத்த சம்பள உயர்வும் வழங்கப்படவேண்டும். அதோடு விவசாயம், விடமைப்பு போன்ற துறைகளை வலுப்படுத்தினால் அது மக்களுக்குத்தான் நன்மையைத் தரும்.
திவெட்கல்வித்திட்டம்.
திவெட் எனப்படும் தொழில்கல்விப் பயிற்சித் திட்டத்திற்கு அரசாங்கம் 7.5 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கி இருக்கிறது. இதன்மூலம் 2023இல் வேலை வாய்ப்பு விகிதம் 96.5 விழுக்காடாகப் பதிவானது. திவெட் கல்விமூலம் நல்ல சம்பளம் கிடைக்கக்கூடிய வேலை வாய்ப்புகளையும் இளையோர் பெற முடிகிறது. குறிப்பாக ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, பசுமைத் தொழில்நுட்பம். நவீன தயாரிப்புத்துறை போன்றவற்றில் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகளை இணயேர் பெற முடிகிறது.
இந்த நிலையில் தொழிலாளர்களின் சம்பள நடைமுறையை வலுப்படுத்தும் வகையில் முற்போக்குச் சம்பளக் கொள்கை அறிமுகம் செய்யப்படுகிறது என்று பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி குறிப்பிட்டிருக்கிறார். இதற்காக சில சலுகைகளையும் அரசு கொண்டு வந்திருக்கிறது. 200 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு மூலம் வர்த்தக நிறுவனங்கள் ஆற்றல்மிக்க சிறந்த செயல்திறன் கொண்ட தொழிலாளர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரிங்கி ட்டிற்கும் அதிகமாகச் சம்பளம் கொடுப்பதை ஊக்குவிப்பதாகவும் அமைகிறது.
பணவீக்கம் உயராமல் இருப்பதற்கு நிலைத்தன்மைமிக்க பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக சம்பள விகிதம் அமைய வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கம் என அவர் குறிப்பிட்டிருக்கிறன். குறைந்தபட்ச சம்பளம் இந்த நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி குறைந்தபட்ச சம்பள விகிதம் 1,700 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே இருந்த 1,500 ரிங்கிட் குறைந்தபட்ச சம்பளத்தில் இருந்து RM200 உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறைந்த வருமானம் பெறக்கூடிய தொழிலாங்க்களுக்குக் கொஞ்சம் நிம்மதியை அளித்திருக்கிறது. இதுபோன்ற நீண்டகாலத் தீர்வுகளைக் கொண்டு வரும் வியூகங்கள்தாம் இப்போது நாட்டிற்குத் தேவைப்படுகின்றன. குறிப்பாக அனைத்துலக அளவில் பெரிய நிறுவனங்கள் மலேசியாவில் செய்யும் முதலீடுகள் மூலம் வேலை வாய்ப்புகள் பெருகி வேலையில்லா விகிதச்சாரம் குறையவும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.
உதரணத்திற்கு கூகுள் நிறுவனம் மலேசியாவில் ஒரு தரவு மையத்தில் 2 பில்லியன் டாலரை முதலீடு செய்கிறது. செயற்கை நுண்ணறிவு திட்டமும் இந்த முதலீட்டில் அடங்கும். இதன்மூலம் 2030ஆம் ஆண்டுவாக்கில் கிட்டத்தட்ட 20,500 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம் விவசாயிகள், மீனவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய நீண்டகாலச் செயல்திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டியது அவசியமாகும். குறுகியகாலத் தீர்வாக அமையும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். அதேசமயம் நீண்டகால அடிப்படையிலான தீர்வுகளை வழங்கக்கூடிய திட்டங்களையும் வியூகங்களையும் அரசாங்கம் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டினால் வாழ்க்கைச் செல்லின உயர்வுடன் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு அது பேருதவியாகவும் சுமையை நீக்கக்கூடிய வியூகமாகவும் அமையும்.