கோலாலம்பூர்:
நாடு முழுவதும் தினசரி சராசரியாக 319 பேருக்கு தடைசெய்யப்பட்ட பகுதிகளில் புகை பிடிப்பதற்காக அபராதங்கள் வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த புகைப்பிடிப்பவர்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் 2019 ஆம் ஆண்டு உணவகங்களில் புகைத்தல் தடை செய்யப்பட்டதை மீறி உணவகங்களில் புகைபிடிப்பதாக சுகாதார அமைச்சகம் வழங்கிய புள்ளிவிவரங்களில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உணவகங்களில் புகைபிடிக்கும் நபர்களின் வீடியோக்களால் சமூக ஊடகங்கள் அவ்வப்போது பரபரப்பாக இருக்கும், இது புகைத்தல் தடை சட்டத்தின் அமலாக்கம் சரியாக இல்லை என்று எண்ணத்தோன்றுவதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அஹ்மாட் கூறினார்.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும், உணவகங்களை உள்ளடக்கிய புகையிலை தயாரிப்பு விதிமுறைகள் 2004 (CTPR) இன் கீழ் 38,347 அபராதங்கள் வழங்கப்பட்டன. இதில், உணவருந்தும் பகுதிகளில் புகைபிடித்த 16,705 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிலாங்கூரில் 6,174 அபராதங்கள் வழங்கப்பட்டன, அதைத் தொடர்ந்து பகாங் (5,054), ஜோகூர் (3,824), பினாங்கு (2,974), சரவாக் (2,680), கெடா (2,562), பேராக் (2,538), கிளந்தான் (2,567) மற்றும் நெகிரி செம்பிலான் (2,322) ஆகிய மாநிலங்களிலுள்ளவர்களுக்கு அபராதம் வழங்கப்பட்டது.
இவை தவிர கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் மொத்தம் 2,224 அபராதங்கள் வெளியிடப்பட்டன, சபாவில் 1,920 அபராதங்களும், திரெங்கானுவில் (1,828), பெர்லிஸில் (806), மலாக்காவில் (792) மற்றும் லாபுவானில் (82) என தடை செய்யப்பட்ட இடங்களில் புகைபிடித்தவர்களுக்கு எதிரான அபராதங்கள் நீண்டுகொண்டு செல்கிறது.
சட்டத்தின் கீழ், புகைப்பிடித்தல் தடையை மீறுபவர்களுக்கு RM10,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். அத்தோடு உணவக உரிமையாளர்களுக்கு RM5,000 அபராதம் அல்லது ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
“சில புகைப்பிடிப்பவர்களிடம் நடத்தப்பட்ட கண்காணிப்பில் அவர்களுக்கு அதுதொடர்பான கல்வி மற்றும் அமலாக்கத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பது , தடையை தொடர்ந்து புறக்கணிப்பது போன்ற காரணங்கள் கண்டறியப்பட்டது, இந்த இணக்கமின்மை மற்றும் அறியாமை அமலாக்க அதிகாரிகளுக்கு சிரமங்களை ஏற்படுத்துகிறது மற்றும் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.




















