புத்ராஜெயா:
E-Invoice நடைமுறையின் 3ஆவது கட்டத்தில் தன்னார்வ முறையில் 4,900 பேர் இணைந்துள்ளனர் என்று உள்நாட்டு வருமான வரி வாரியம் நேற்றுத் தெரிவித்தது.
E-Invoice அமலாக்கம் இப்போது 2ஆவது கட்டத்தில் நுழைந்திருக்கின்ற நிலையில் அதில் பங்கேற்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்று அது வெளியிட்ட அறிக்கை கூறியது.
இரண்டாம் கட்டத்தில் பங்கேற்ற 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வரி செலுத்துவோர் E-Invoice நடைமுறையைத் தேர்வு செய்துள்ளனர். இந்த நிலையில் உள்நாட்டு வருமான வரி வாரியம் E-Invoice நடைமுறையை அறிமுகம் செய்ததில் இருந்து வரி செலுத்துவோர் பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். வர்த்தக நடவடிக்கை, தொழில் நுணுக்கம் உள்ளிட்டவையும் அவற்றுள் அடங்கும்.
வாடிக்கையாளர்களுக்கு E-Invoice வெளியிடும்போது அடையாள எண்களைப் பெறுவது சிரமமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு உள்நாட்டு வருமான வரி வாரியம் TNI எனப்படும் தேடுதல் சேவைத் தளத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.
1967ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் இந்தச் சேவை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. E-Invoice அமலாக்கத்திற்குத் தேவையான வரி வசூல் நடவடிக்கைகளை இது உள்ளடக்கியுள்ளது என்று அவ்வாரியம் வெளியிட்ட அறிக்கை கூறியது.
mytax வலைத்தளத்தின் மூலமாக 2025 ஜனவரி முதல் தேதி தொடங்கி இந்தத் தளத்தை வரி செலுத்துவோர் வலம்வர முடியும். கீழ்க்காணும் விவரங்களை இணைப்பதன் மூலம் வரி செலுத்துவோர் TNI தளத்தில் தேடுதலைச் செய்ய முடியும். தனிநபர்களைப் பொறுத்தவரையில் அவர்களின் அடையாள அட்டை எண் அல்லது கடப்பிதழ் எண்களை இணைக்கலாம்.
தனிநபர் அல்லாதவர்கள் வர்த்தகப் பதிவு எண்களை அல்லது வருமான வரி வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோர் பெயரை இணைக்கலாம் என்றும் உள்நாட்டு வருமான வரி வாரியத்தின் அறிக்கை கூறியிருக்கிறது.
https://mytax.hasil.gov.my எனும் அகப்பக்கத்தில் மைடெக் வலைத்தளத்தை வலம்வர முடியும்