எங்களின் குரலுக்கு அரசாங்கம் செவி சாய்க்குமா? பிரெஸ்மா- பிரிஸ்மா வேதனை

மலேசியன் முஸ்லீம் உணவக உரிமையாளர் சங்கம் (பிரெஸ்மா), மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் (பிரிஸ்மா) இரு சங்கங்களுக்கு இணைந்து நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் தாங்கள் எதிர்நோக்கும் அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறை குறித்து தங்களின் வேதனையையும் ஆதங்கங்களையும் வெளிப்படுத்தினர்.

உணவகங்களை நடத்துவது இன்றைய காலக்கட்டத்தில் சவாலானதாக இருக்கிறது. குறிப்பாக நாளுக்கு நாள் அதிகரிக்கும் பொருட்களின் விலைகள், போக்குவரத்து செலவினங்கள் என பலவிதமான சவால்களை சமாளித்து வரும் வேளையில் தொழிலாளர்கள் பற்றாக்குறை உண்மையிலேயே உணவக நடத்துனர்களான எங்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.

அரசாங்கம் பலமுறை எங்களிடம் கேட்டுக் கொண்டிருந்ததற்கு இணங்க உள்ளூர் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த பல முயற்சிகளை மேற்கொண்டோம்.  ஆனால் உள்ளூர் தொழிலாளர்கள் உணவகங்களில் பணியாற்றுவதை விரும்பவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.  இந்த நிலையில் மார்ச் 2024 இல் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவதை உடனடியாக நிறுத்த முடிவு செய்த உள்துறை அமைச்சகத்தின் (KDN) உத்தரவு வந்தபோது நிலைமை மிகவும் மோசமானது. இதனால் நாட்டில் உணவக வணிகம் உட்பட கிட்டத்தட்ட அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டன.

ஆகவே, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கத்திற்கு பிரெஸ்மா, பிரிஸ்மா பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் சுமார் 25,000 தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட வெளிநாட்டு ஊழியர்களை வரவழைக்க எங்களுக்கு சில நெகிழ்வுத்தன்மையை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக பிரெஸ்மா தலைவர் டத்தோ ஹாஜி ஜவஹர் அலி பின் தய்யூப் கான், பிரிஸ்மா தலைவர் டத்தோ ஜே கோவிந்தசாமி@ சுரேஷ் ஆகியோர் கூட்டாக கோரிக்கை விடுத்தனர்.

1. குடிவரவு வெளியேறும் கவுண்டரில் உள்ள ‘செக்-அவுட் மெமோ’ அடிப்படையில், சொந்த நாட்டிற்குத் திரும்பிய ஊழியர்களுக்குப் பதிலாக புதிய பணியாளர்களை பணியமர்த்த அனுமதிக்கும் ‘பணியாளர் மாற்று’ கொள்கையை மீண்டும் அறிமுகப்படுத்துதல். இந்த ‘ஊழியர் மாற்று’ கொள்கை முன்பு நடைமுறையில் இருந்தது. ஆனால் முந்தைய அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது. உள்துறை அமைச்சகம் ‘மாற்று’ கொள்கையை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும்.

2. தொழிலாளர்களுக்கான வயது வரம்பை தற்போது இருக்கும்  18 முதல்   45 வயது என்பதனை 18 முதல் 60 வயதாக  மாற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு அரசாங்கத்திடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறோம். ஏனென்றால், எங்கள் ஊழியர்களில் பெரும்பாலோர் இன்னும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தாலும்  அவர்கள் தங்களின் பணியை சிறப்பாக செய்கின்றனர்.

3. நாங்கள் தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்கவும், பொருளாதார நிலைமையை மேலும் நிலையானதாக வைத்திருக்கவும், பல அடுக்கு வரி விதிப்பு முறையை அமல்படுத்துவதை ஒத்திவைக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். அடுக்கு வரிவிதிப்பு முறை வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கான செலவை அதிகரிக்கும். குறிப்பாக உணவகத் தொழில் போன்ற சிறு தொழில்களுக்கு. அதிகரித்த இயக்கச் செலவுகள் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க வழிவகுக்கும்.

இதனால் நுகர்வோருக்கு  சுமை ஏற்படும். மலேசியாவில் உணவகத் துறை, குறிப்பாக 24 மணி நேரமும் இயங்கும் உணவகங்களில், ஒவ்வொரு நாளும் வணிகத்தைத் தொடர்வதற்குப் போதுமான மனிதவளத்தைச் சார்ந்திருப்பதால், அரசாங்கம் எங்கள் கோரிக்கையை உரிய முறையில் பரிசீலிக்கும் என்று தாங்கள் நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here