கோலாலம்பூர்:
மலேசியாவில் சுகாதாரக் கண்காணிப்பு முறையில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் ஆக்கத்திறன் அதிகரிப்பதோடு செலவு விரயங்களைக் குறைப்பதற்கு உதவும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் தாம் பதவியேற்ற நாளில் இருந்து கல்விக்கும் சுகாதாரக் கவனிப்பிற்கும் அதிக முன்னுரிமை தந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். என்னுடைய அரசியல் சித்தாந்தத்தில் மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளைச் செய்து தருவதை மறுப்பது அநீதியாகும் என்று நினைக்கிறேன்.

இதில் மருத்துவமனை போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் மிகவும் முக்கியமானதாகும். இதில் ஏஐ முக்கியப் பங்கை ஆற்றுகின்றது. ஏஐ ஆக்கத்திறனை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமன்றி மருத்துவ விரயச் செலவுகளைக் குறைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது.
அதி நவீன தொழில்நுட்பமான ஏஐ இதனை மிகச்சரியாகச் செய்து முடிப்பதற்குரிய ஆற்றலைக் கொண்டிருக்கிறது என்று இங்கு நடைபெற்ற வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் நடைபெற்ற வியூக விவாத நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
பொது சுகாதார முறையில் ஏஐ ஒருக்கிணைக்கப்படுவது குறித்து பங்கேற்பாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு டத்தோஸ்ரீ அன்வார் இவ்வாறு பதிலளித்தார்.

இந்த விவாத நிகழ்ச்சியை முதலீடு, வாணிபம், தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் வழிநடத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிஜிட்டல்துறை அமைச்சர் கோபிந்த சிங் டியோ, சுகாதார கவனிப்பு முறையில் AI செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக இருப்பதற்கு அவசியமான அடிப்படைக்க டமைப்புகள் மிகச்சரியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

AI செயல்பாடுகளை விரைந்து டிஜிட்டல் முறைக்குக் கொண்டு வருவதுதான் இந்த நவீன தொழில்நுட்பத்தின் திறனுக்கு வலுசேர்க்கும். AI வசதிகளை அறிமுகப்படுத்தும் நேரத்தில் ஒரு நோய்க்குக் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட சிகிச்சைகளை விரைந்து கண்டுபிடிப்பதற் முறையான தரவுகளை அது கொண்டிருக்க வேண்டும் என்பதையும் கோபிந்த் சிங் காட்டினார்.




















