தீபாவளிக்காக… ஒளியின் திருநாளை உணர்ச்சி பொங்கும் உண்மை கதையுடன் ஒளிரச் செய்கிறது Air Selangor.

டாக்டர் ஆக வேண்டும் என்பது தீபாவின் கனவு. அந்த கனவை நிறைவேற்றுவதற்கு தந்தை கணேசனும் அவரின் குடும்பத்தினரும் அவர்கள் வாழ்க்கைப் பயணத்தில் எதிர்நோக்கிய சவால்கள், தியாகங்கள் வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது.

ஆனால் இந்தத் தியாகங்களும் சவால்களும் மற்றவர்களுக்கு ஓர் உத்வேகம் தரும். இதனை “Demi Deepa” (தீபாவிற்காக…) என்ற ஒரு குறும்படத்தை இவ்வாண்டு தீபாவளிக் கொண்டாட்டத்திற்காக Air Selangor தயாரித்திருக்கிறது. இது டாக்டர் மலர் சாந்தியின் உண்மைக் கதையை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

தீபாவிற்காக… என்ற இந்த குறும்படம் நம்மில் பலருக்கு மிகப் பெரிய ஒரு பாடமாகவும் வழிகாட்டியாகவும் அமைந்திருக்கிறது. தன்னுடைய மகளின் கனவையும் லட்சியத்தையும் நிறைவேற்றுவதற்காக ஒரு தந்தையின் தியாகங்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. இதயத்தை உருக்கி கண்ணீரைச் சிந்த வைக்கும் அந்த தியாகங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சவால்களைக் கடந்து போகக் கூடிய பாடத்தைக் கற்றுத்தருகிறது.

மிகவும் எதார்த்தமான முறையில் இந்த குறும்படம் உருவாகி இருக்கிறது. ஒரு குடும்பத்தின் அன்பும் அரவணைப்பும் ஆதரவும் இருந்தால் பிள்ளைகளின் எதிர்காலம் பிரகாசிக்கும் என்பதற்கு தீபாவிற்காக… என்ற இந்த குறும்படம் ஒரு வாழ்க்கைப் பாடமாக அமைந்திருக்கிறது.

ஒரு மருத்துவ டாக்டரான மலர் சாந்தி சமூக ஊடகங்களில் மன நலக் குறிப்புகளை பயன்தரும் வகையில் மிக எளிய முறையில் தந்து வரும் ஓர் இன்ஃபுளூவன்சராகவும் இருக்கிறார். மலாய் மொழியில் மிகச்சரளமாக இந்த குறிப்புகளை வழங்கி வருகிறார்.

7 நிமிட குறும்படத்தில் டாக்டர் மலர் அவர்களுடன் பிரபல நடிகர் அமிருல் அஃபெண்டியும் சேர்ந்து நடித்திருக்கிறார். “Demi Deepa” என்ற உத்வேகம் அளிக்கக் கூடிய கதையை பகிர்ந்துகொள்வதை தாங்கள் மிகப் பெரிய பெருமையாக கருதுவதாக Air Selangor காப்பரேட் தொடர்புத்துறைத் தலைவர் எலினா பசெரி கூறுகிறார்.

தன்னுடைய மகளுக்காக ஒரு தந்தையின் தியாகங்களை மட்டும் இந்தக் குறும்படம் வெளிப்படுத்துவதல்ல. வளமான வாழ்க்கைக்கு மன நலம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்களுக்கு தெளிவுபடக் கூறிவரும் ஒரு மருத்துவரின் அற்புதமான சேவையையும் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

ஒளியின் திருநாளான தீபாவளியின் உண்மையான சாரத்தையும் உணர்ச்சி ஆழத்தையும் வெளிப்படுத்தி, ‘Demi Deepa’ அன்பு, நம்பிக்கை மற்றும் வறுமையின் கொண்டாட்டமாக ஒளிர்கிறது. மனதைத் தொடும் “Demi Deepa” என்ற குறும்படத்தை 2025 அக்டோபர் 5ஆம் தேதி முதல் hydrohub.airselangor.com, Facebook, Instagram,  You Tube  எனும் Air Selangor -இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் காணலாம். Watch the Deepavali 2025 video here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here