கோலாலம்பூர்:
போதைப்பொருள் கும்பலின் தலைவன் என்று நம்பப்படும் 49 வயது நபர் மற்றும் அவரது இரண்டு மகன்களை ஜோகூரின் மூவாரில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து மலாக்கா போலீசார் கைது செய்தனர்.
போதைப்பொருள் தலைவன் என நம்பப்படும் குறித்த ஆடவரின் இரண்டு மகன்களில் ஒருவர் 20 வயது கல்லூரி மாணவர் என்றும், மற்றவர் 17 வயதுடைய படிவம் ஐந்தில் படிக்கும் மாணவர் என்றும், இருவரும் ஜோகூரில் வசிக்கின்றனர் என்றும் மலாக்கா காவல்துறையின் இடைக்கால தலைவர் துணை ஆணையர் டத்தோ முகமட் நஸ்ரி ஜவாவி கூறினார்.
“சில நாட்களுக்கு முன்பு ஜாசின் காவல்துறை தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இந்த சோதனையை நடத்தியது என்றும், இந்தக் கும்பலிடமிருந்து 23,372 கிராம் ஹெரோயின், 10,200 கிராம் மெத்தம்பேட்டமைன் மற்றும் 275 எரிமின் 5 மாத்திரைகள் உட்பட பல்வேறு வகையான சுமார் RM560,000 என மதிப்பிடப்பட்டுள்ள போதைப்பொருட்களை போலீசார் கைப்பற்றினர் என்றும் அவர் கூறினார்.
”மேலும், சந்தேக நபர்களுக்குச் சொந்தமான சொத்துக்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர், அவற்றின் மதிப்பு சுமார் RM56,000″ என்று அவர் இன்று புதன்கிழமை (ஜனவரி 29) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.
சந்தேக நபர்கள், 1952 ஆம் ஆண்டு ஆபத்தான மருந்துகள் சட்டத்தின் பிரிவு 39B இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக பிப்ரவரி 2 ஆம் தேதி வரை ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.





















