கனடா -இந்தியா முறுகல் : ஸ்காட்லாந்தில் கோயிலுக்குள் செல்ல இந்திய தூதருக்கு அனுமதி மறுப்பு

லண்டன்:

பிரிட்டனுக்கான இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் உள்ள ஒரு சீக்கிய கோயிலுக்குள் செல்ல முயன்றார்.

ஆனால் அவர் உள்ளே செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் பிறகு அவர் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சீக்கிய தீவிரவாதி கொலை தொடர்பில் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிரச்சினை மூண்டுள்ள நிலையில் புதிதாக இந்தப் பிரச்சினை தலை எடுத்துள்ளது.

ஸ்காட்லாந்து சம்பவம் தொடர்பில் இன்ஸ்டகிராமில் ‘பிரிட்டன் இளம் சீக்கியர்’ என்ற அமைப்பு காணொளி ஒன்றைப் பதிவேற்றியது.

அந்தக் கோயிலுக்குள் செல்ல முயன்ற தூதரை, ஆடவர் ஒருவர் தடுத்து நிறுத்தியதைக் காணொளி காட்டியது. அந்த ஆடவர் காலிஸ்தான் ஆதரவாளர் என்று இந்திய அரசு தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன.

“கனடாவிலும் இதர இடங்களிலும் அவர்கள் சீக்கியர்களைத் துன்பப்படுத்துகிறார்கள்.

“நாங்கள் இங்கு செய்ததைப் போலவே ஒவ்வொரு சீக்கியரும் எந்த ஓர் இந்தியத் தூதருக்கும் எதிராக செயல்பட வேண்டும்,” என்று காணொளியில் ஒரு குரல் ஒலித்தது.

இதனிடையே, இந்த விவகாரத்தை பிரிட்டனின் வெளியுறவு அமைச்சு, காவல்துறையிடம் இந்தியா கொண்டு சென்று அது பற்றி கவலை தெரிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here