ரஞ்சி கோப்பையில் கோலி; அலைமோதிய ரசிகர்கள்

இந்திய அணிக்காக அறிமுகமாகிப் பிரபலமான பிறகு விராட் கோலி ரஞ்சி கோப்பையில் ஆடியதே இல்லை. இந்திய அணிக்காக பிஸியாக ஆடி வந்ததால் உள்ளூர் போட்டிகளில் ஆடுவதைத் தவிர்த்து வந்தார். ஆனால், சமீபத்தில் இந்திய அணி தொடர் தோல்விகளைச் சந்தித்திருந்தது.

உள்ளூரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒயிட் வாஷ் ஆகியிருந்தனர். ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்திருந்தனர். இந்தத் தோல்விகளால் பி.சி.சி.ஐ இந்திய வீரர்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, போட்டிகளின்போது வீரர்களின் குடும்பத்தினர் குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும்தான் அவர்களுடன் தங்கியிருக்க வேண்டும் என்பது உட்பட 10 கட்டுப்பாடுகளை விதித்தனர்.

அதில் முக்கியமாக இந்திய அணிக்காக ஆடும் வீரர்கள் போட்டிகள் இல்லாத சமயத்தில் கட்டாயம் உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என்பது. இதனைத் தொடர்ந்துதான் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற இந்திய அணியின் சீனியர்களே ரஞ்சிப் போட்டியில் ஆடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ரோஹித் சர்மா கடந்த வாரத்தில் நடந்த ரஞ்சிப் போட்டியிலேயே மும்பை அணிக்காக ஜம்மு & காஷ்மீருக்கு எதிராக ஆடிவிட்டார். ஆனால், கோலி சௌராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் கழுத்து வலி காரணமாக ஆடாமல் இருந்தார். ஆனாலும் டெல்லி அணியுடன் இணைந்து தொடர்ச்சியாகத் தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில்தான் இன்று டெல்லியில் நடந்து வரும் இரயில்வேஸூக்கு எதிரான போட்டியில் ஆடி வருகிறார்.

 டெல்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்தப் போட்டியைக் காண 10,000 ரசிகர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அவர்களின் எதிர்பார்ப்பை மிஞ்சி மொத்தமாக 25,000 ரசிகர்கள் கோலியைக் காண்பதற்காக மைதானத்திற்கு வந்திருக்கின்றனர். உள்ளூரில் போட்டி நடப்பதால் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி, அவரின் சிறுவயது பயிற்சியாளர் எனக் கோலிக்கு நெருக்கமானவர்கள் பலரும் கோலிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போட்டியைக் காண வந்தது நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here