ஜார்ஜ் டவுன்:
வரும் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படவுள்ள நிலையில், பினாங்கில் தேங்காய் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.
ஒரு தேங்காயின் முந்தைய விலை சராசரியாக RM2.50 முதல் RM2.60 வரை இருந்த நிலையில், தற்போது RM3.90 வரை விலை உயர்ந்துள்ளது.
அதேநேரம், இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் ஒவ்வொன்றும் RM3 வரை விற்கப்படுகின்றது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் (CAP) கல்வி அதிகாரி NV சுப்பாராவ் கூறினார்.
தேங்காய் தட்டுப்பாட்டிற்கு சீரற்ற வானிலையே முக்கியக் காரணம் என்று கூறப்படும் நிலையில், “பேராக், பாகான் டத்தோக்கில் உள்ள உள்ளூர் தேங்காய் உற்பத்தியாளர்களை CAP தொடர்பு கொண்டது என்றும், இந்த பிரச்சினை கடந்தாண்டு மே மாதம் முதல் இருந்து வருகிறது என்றும், தோட்டங்களில் தேங்காய் உற்பத்தி குறைந்துள்ளதையும் அவர்கள் உறுதிப்படுத்தினர் என்று அவர் கூறினார்.
மலேசியாவில் மோசமடைந்து வரும் தேங்காய் உற்பத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேளாண் துறையை, குறிப்பாக அதன் பயிர் ஆராய்ச்சி நிபுணர்களை தாம் கேட்டுக் கொண்டதாக சுப்பா ராவ் சொன்னார்.
தைப்பூசத்திற்கு சிதறு தேங்காய் உடைப்பது இந்துசமய பாரம்பரியமாக இருக்கிறது. எனவே பினாங்கில் நிலவும் தேங்காய் தட்டுப்பாடு பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செய்வதற்கு இடையூறாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.





















