ஜகார்த்தா:
ஓரினச் சேர்க்கை விருந்து நிகழ்வில் திரண்ட 56 ஆண்களை இந்தோனேசியக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள சௌத் ஜகார்த்தா ஹோட்டலில் கடந்த சனிக்கிழமையன்று (பிப்ரவரி 1) அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறைப் பேச்சாளர் ஏட் ஏரி சயம் இந்திராடி திங்கட்கிழமையன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நிகழ்விடத்திலிருந்து ஆணுறைகளும் HIV தொற்றுத் தடுப்பு மருந்துகளும் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கைதுசெய்யப்பட்டோரில் மூவர்மீது அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள்மீதான குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் 15 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
ஜகார்த்தா உட்பட இந்தோனேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானதன்று. அதே நேரத்தில், முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட அந்நாட்டில் அச்செய்கை சமூகக் கட்டுப்பாட்டிற்கு எதிரானதாகக் கருதப்படுகிறது.





















