கோலாலம்பூர்:
பள்ளி மாணவர்கள் தப்பு செய்தால், அவர்களை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அதிகாரம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் மட்டுமே பிரம்பால் அடிக்க முடியும் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுக்கு பிரம்படி உட்பட உடல் ரீதியான தண்டனைகளை வழங்குவதற்கு பெற்றோர்கள் அல்லது பிற பொதுமக்களுக்கு சட்டம் அனுமதிக்கவில்லை.
1959 ஆம் ஆண்டு கல்வி விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளபடி கடுமையான வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, தலைமை ஆசிரியர் அதிகாரம் வழங்கப்பட்ட ஆசிரியர் மட்டுமே மாணவர்களை பிரம்பால் அடிக்க முடியும் என்றும், கல்வி (பள்ளி ஒழுக்கம்) ஒழுங்குமுறைகளில் இது குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், இன்று நாடாளுமன்றத்திலளித்த ஒரு எழுத்துப்பூர்வ பதிலில் ஃபத்லினா கூறினார்.
மேலும் 2003 சுற்றறிக்கையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, மாணவர்கள் மற்றவர்களுக்கு முன்பாகவோ அல்லது பொது இடங்கள், பள்ளி ஒன்றுகூடல் இடங்களில் ஒருபோதும் பிரம்படி தண்டனை வழங்கப்படக்கூடாது என்றார்.
அதேநேரம், குறித்த சுற்றறிக்கையின் அடிப்படையில் மாணவிகளுக்கு பிரம்பால் அடிக்க முடியாது.
“கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்காக அவர்களை கண்டிக்க பிரம்பால் அடிக்கலாம். இருப்பினும், அத்தண்டனையானது மாணவர்களுக்கு வலியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்க கூடாது, மாறாக மாணவர்களின் செயல்களின் தாக்கங்களை அவர்கள் புரிந்து கொள்ள அவர்களை நெறிப்படுத்தும் என்று அவர் சொன்னார்.




















