தை கிருத்திகை வழிபாடு

ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரம் என்பது வரும். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய இந்த கிருத்திகை நட்சத்திரம் என்பது மிகவும் சிறப்புக்குரியது என்றாலும் அதிலும் குறிப்பாக தை, ஆடி, கார்த்திகை   மாதத்தில் வரக்கூடிய கிருத்திகைக்கு அதீத பலன் இருக்கிறது என்று கூறப்படுகிறது. தொடர்ச்சியாக கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருந்து முருகப்பெருமானே வழிபாடு செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள் இந்த மூன்று மாதங்களில் வரக்கூடிய கிருத்திகையிலிருந்து விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. பல அற்புதமான சிறப்பு மிகுந்த இந்த தை கிருத்திகை நாளன்று எந்த முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்தால் நம் வேண்டியது கிடைக்கும்.
தை கிருத்திகை வழிபாடு முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாக திகழ்வது கிருத்திகை நட்சத்திரம் என்றும் அந்த நட்சத்திரம் வரக்கூடிய நாளில் நம் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்தால் முருகப்பெருமான் நாம் வேண்டியதை கொடுப்பார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு காரணம் முருகப்பெருமானை வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள். அவர்கள்தான் கார்த்திகை நட்சத்திரமாக வருகிறார்கள்.
தன்னை வளர்த்த கார்த்திகை பெண்களின் நினைவாக வரக்கூடிய கிருத்திகை நட்சத்திர நாளன்று யார் ஒருவர் முருகப்பெருமானை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும். அதிலும் குறிப்பாக தை கிருத்திகை என்பது மிகவும் சிறப்பு மிகுந்தது. அந்த நாளில் நாம் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறையை பற்றி பார்ப்போம்.
விரதம் இருப்பவர்கள் முதல் நாள் இரவே எளிமையான ஆகாரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். தை கிருத்திகை என்பது பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது.  காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்து செவ்வரளி மலர்கள் அல்லது ரோஜா மலர்களை வைத்து அலங்காரம் செய்து ஒரு தீபத்தை ஏற்றி வைத்து “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை கூறி விரதம் இருக்க ஆரம்பிக்க வேண்டும்.
அன்றைய தினம் முழுவதும் விரதம் இருப்பதாக இருந்தாலும் இருக்கலாம் ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொண்டு விரதம் இருப்பதாக இருந்தாலும் இருக்கலாம். அது அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை பொறுத்து செய்து கொள்ளலாம். பூஜையை நாம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலையில் 7:30 மணியிலிருந்து 11:30 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 5:30 மணியில் இருந்து 9 மணிக்குள் செய்யலாம். ஆனால் விரதத்தை பூர்த்தி செய்வது என்பது மாலை நேரத்தில் தான் இருக்க வேண்டும்.
வீட்டில் கண்டிப்பாக முறையில் முருகப் பெருமானின் சிலையோ வேலோ இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அதற்கு சுத்தமான பசும்பால், தேன் போன்றவற்றை கொண்டு அபிஷேகம் செய்து கொள்ளுங்கள். பிறகு சந்தனம் குங்குமம் வைத்து முருகப்பெருமானுக்கு சிவப்பு நிற மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக சர்க்கரைப் பொங்கல், பாசிப்பருப்பு பாயாசம், தேன், திணை மாவு போன்ற இனிப்பு வகைகளில் தங்களால் எதை செய்ய முடியுமோ அதை செய்து வைக்க வேண்டும்.
அடுத்ததாக முருகப் பெருமானுக்கு முன்பாக ஒரு தாம்பாளத்தையோ அல்லது மனை பலகையோ வைத்துக் கொள்ளுங்கள். அதை மஞ்சள் கலந்த தண்ணீரால் சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு அதில் பச்சரிசி மாவினால் நட்சத்திர கோலம் போட வேண்டும். இந்த நட்சத்திரக் கோலத்தில் இருக்கக்கூடிய ஆறு முக்கோணங்களில் ச ர வ ண ப வ என்று எழுத வேண்டும். அந்தக் கோலத்திற்கு நடுவே ஓம் என்று எழுத வேண்டும்.
அடுத்ததாக நாம் எழுதி வைத்திருக்கும் அந்த சரவணபவ என்னும் எழுத்திற்கு மேலே ஒவ்வொரு அகல் விளக்காக ஆறு அகல் விளக்குகளை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி
போட்டு கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக மலர்களையும் வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு முருகப்பெருமானின் இந்த மந்திரத்தை 308 முறை கூறி முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை அனைத்தும் காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
மந்திரம்:
“ஓம் சரவணபவ போற்றி ஓம்”
எண்ணிய எண்ணம் ஈடேற வேண்டும், நினைத்தது நடக்க வேண்டும், வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப் பெருமானை முழுமனதோடு நம்பி தை கிருத்திகை நாளன்று இந்த முறையில் விரதம் இருந்து வழிபாடு செய்து பாருங்கள். நீங்கள் வேண்டியது முருகப் பெருமானின் அருளால் அப்படியே நடக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here