கோல திரெங்கானு:
நேற்றிரவு ஜாலான் கெமாஜுவானில் பேருந்து மோதியதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து 18 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.
நூர் டாமியா உமைரா அமீர் அஸ்வாதி என்று அடையாளம் காணப்பட்ட அப்பெண், இரவு 8.40 மணியளவில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று, மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் அஸ்லி முகமட் நூர் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், நூர் டாமியா தனது மோட்டார் சைக்கிளில் பண்டார் கோல திரெங்கானுவில் இருந்து மனிரில் உள்ள தனது வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும், 70 வயது முதியவர் ஓட்டிச் சென்ற பேருந்து கோலா பெராங் நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
பலியானவர் இடது பாதையில் வந்து கொண்டிருந்ததாகவும், நடுப் பாதையில் நேராக சென்று கொண்டிருந்த பேருந்தின் பாதையில் அவரது மோட்டார் சைக்கிள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.
“சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41(1) இன் கீழ் (ஆபத்தான வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக) வழக்கு விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.




















