கோலாலம்பூர்,
தேசிய சேவைப் பயிற்சித் திட்டத்தில் (பிஎல்கேஎன் 3.0) பயிற்சியில் ஈடுபடும் ஒருவருக்கான செலவுத்தொகை 2 ஆயிரம் ரிங்கிட்டாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. பிஎல்கேஎன் 1.0 ஆண்டுக்கு 565 மில்லியன் ரிங்கிட் செலவில் 71,300 மாணவர்களுக்குச் செலவிடப்பட்டது. ஒரு பங்கேற்பாளருக்கான செலவுத்தொகை சராசரி 7,900 ரிங்கிட் ஆகும். அதேசமயத்தில் 20 ஆயிரம் பங்கேற்பாளர்கள் பங்கேற்ற பிஎல்கேஎன் 2.0 பயிற்சித் திட்ட அமலாக்கத்திற்கு 361 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டது. ஒரு பங்கேற்பாளருக்கு 18 ஆயிரம் ரிங்கிட் செலவிடப்பட்டது.இதுவே மிக அதிகமான செலவு என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால் பிஎல்கேஎன் 3.0 பயிற்சிக்கு 200 மில்லியன் ரிங்கிட் மட்டுமே செலவிடப்படுகிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் இப்பயிற்சியில் ஈடுபடுவர். ஒவ்வொருவருக்கும் தலா 2 ஆயிரம் ரிங்கிட் செலவிடப்படும் என்று மூவார் நாடாளுமன்றத் தொகுதி சுயேச்சை வேட்பாளர் சைட் சைட் அப்துல் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போது அவர் கூறினார்.
பிஎல்கேஎன் 3.0 தேசிய சேவைப்பயிற்சியை அமல்படுத்து வதற்குரிய செலவு எவ்வளவு என்று சைட் சைடிக் கேள்வி எழுப்பி இருந்தார். இந்தப் பயிற்சி தன்னார்வ அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
பிஎல்கேஎன் 3.0 பயிற்சியானது நாட்டின் இறையாண்மை, மனநிலை ஒழுக்கம் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும். சிறிய அளவில் ராணுவப் பயிற்சியும் இதில் இடம்பெறும். மேலும் பங்கேற்பாளர்களின் வயது அடிப்படையில் பயிற்சி அம்சங்களும் இடம்பெற்றிருக்கும் என்று காலிட் சொன்னார். பிஎல்கேஎன் 2004ஆம் ஆண்டில் அப்போதைய பாரிசான் நேஷனல் அரசாங்கத்தால் அறிமுகப் படுத்தப்பட் டது. 2015இல் அத்திட்டம் கைவிடப்பட் டது. பின்னர் ஓராண்டுக்குப் பின்னர் அது மறு அறிமுகம் கண்டது. தொடர்ந்து 2018ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் மீண்டும் ரத்து செய்யப்பட்டது.



















