கோலாலம்பூர்:
மியன்மாரில் நீடிக்கும் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வர ஆசியான் இன்னும் கண்டிப்பான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் வலியுறுத்தினார்.
அண்மையில் லங்காவியில் நடைபெற்ற ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மியன்மார் நாட்டின் ராணுவ அரசாங்கம் தன் மக்களுக்கு எதிராக அனைத்து வகையான வன்செயல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் காலவரம்பு எதுவும் இல்லை. அந்த நாட்டின் ராணுவ அரசு வன்செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார் அவர்.
மனிதாபிமான உதவிகள்
மியன்மாரில் நீடிக்கும் வன்செயல்களை முடிவுக்குக் கொண்டு வர அந்த நாட்டைக் கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய நிலையில் ஆசியான் இன்னும் இருக்கவில்லை. ஆனால் மியன்மார் நாட்டு மக்கள் அவதிப்படும் அளவுக்கு நிலவும் வன்செயல்களை அந்த நாட்டு அரசு நிறுத்த வேண்டும் என்று ஆசியான் கோரிக்கை விடுக்க முடியும். அதேசமயம் அவதிப்படும். அந்த நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை மியன்மார் அனுமதிக்க வேண்டும் என அசியான் வலியுறுத்த முடியும் என்று அவர் சொன்னார்.
நாம் தொடர்ந்து உதவிகள் வழங்கிவரும் வேளையில் அது தேவைப்படும் மக்களுக்குச் சென்றடையாவிட்டால் அதில் என்ன நன்மை கிடைக்கப்போகிறது? ஆகவே உதவிகளை மீட்டுக் கொள்வதன் மூலம் மியன்மார் ராணுவ அரசுக்கு நாம் நெருக்குதலைத் தர முடியும் என்றும் அவர் கூறினார்.
தொடரும் சர்ச்சை
கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி தொடங்கி மியன்மாரில் நீடிக்கும் சர்ச்சை மோசமடைந்திருக்கிறது. ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை வீழ்த்திய ராணுவம் அந்நாட்டு அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
ஆங் சான் சூகி தலைமையில் ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட்ட தேசிய லீக் கட்சியின் அரசாங்கத்தை வீழ்த்தி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. இதை எதிர்த்து அந்த நாட்டில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதனால் அந்த நாட்டில் அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. மனிதாபிமான நெருக்கடிகளும் தொடர்கின்றன.
இதற்குப் பதிலடி கொடுக்க எதிர்க்கட்சியினர் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை அமைத்தனர். பதவி வீழ்த்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், சமூகப் போராளிகள், அரசியல் தலைவர்களைக் கொண்ட ஒரு நிழல் நிர்வாகமாக அது அமைந்தது.
யுத்தப் பிரகடனம்
மியன்மார் ராணுவ அரசாங்கத்திற்கு எதிராக யுத்தம் தொடங்குவது எனவும் அந்த நிழல் நிர்வாகம் பிரகடனம் செய்திருக்கிறது. மியன்மார் ராணுவம் அமைத்துள்ள அரசாங்கத்திற்கு தேசிய நிர்வாக மன்றம் எனப் பெயர் வைத்திருக்கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக மியன்மார் எல்லையில் சுய ஆட்சி கோரி போராடி வரும் ஆயுதக் குழுக்களும் பொது ராணுவப் படையினரும் இணைந்து ஏற்படுத்திய மக்கள் தற்காப்புப் படைக்கு இந்த நிழல் நிர்வாகம் ஆதரவு அளித் திருக்கிறது.
அனைத்துலக அளவில் கண்டனம் எழுந்த நிலையில் உள்நாட்டு சர்ச்சை நீடிக்கின்ற போதிலும் தேசிய நிர்வாக மன்றம் இந்த ஆண்டு பொதுத்தேர்தலை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. ஆனால் ஜனநாயகம் என்ற போர்வையில் ராணுவ ஆட்சியை நிலைநிறுத்து வதற்கு இந்த நடவடிக்கை ஒரு தந்திரமாக அமைகிறது என்று விமர்சகர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே வெளித்தரப்பினர் தலையீடு இன்றி ஆசியான் கட்டமைப்பு வாயிலாக மியன்மார் சர்ச்சைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என முகமட் வலியுறுத்தினார். மியன்மார் நெருக்கடிக்குத் தீர்வுகாண உண்மையிலேயே யாராவது விரும்பினால் அவர் ஆசியான் மூலமாகத்தான இதைச் செய்ய வேண்டும்.
சில தரப்பினர் ஆயுதங்கள் போன்றவற்றை விநியோகம் செய்வதை நாங்கள் அறிவோம். இது நிறுத்தப்பட வேண்டும். அதிகமான தரப்பினர் தலையிட்டால் அது நிலைமையை மேலும் சிக்கலாக்கும் என்று அவர் எச்சரித்தார்.