கோலாலம்பூர்:
தெக்குன் நேஷனல் எனப்படும் நிதிக்கு ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 3.6 மில்லியன் ரிங்கிட் கடந்த ஜனவரி 14ஆம் தேதி அத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்து 143 இந்திய தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் நேற்றுத் தெரிவித்தார்.
இந்திய சமூக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் வாயிலாக தெக்குன் நேஷனல் நிதிக்கு மனுச் செய்தவர்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.
இந்த 3.6 மில்லியன் ரிங்கிட்டில் 555,000 ரிங்கிட் ஸ்பூமி கோஸ் பிக் திட்டத்தின் கீழ் 14 தொழில்முனைவோருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் ஸ்பூமி வாயிலாக 123 தொழில்முனைவோருக்கு 3.061 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டது என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு சிறப்பாக நிர்வகிக்கப்படுவதையும் நிதி அளிக்கப்படுவதையும் உறுதிசெய்ய ஸ்பூமி, ஸ்பூமி கோஸ் பிக் ஆகியவற்றின் மாதாந்திரக் கண்காணிப்புக் கூட்டங்களுக்குத் தாம் தலைமையேற்பதாகவும் அவர் சொன்னார்.