ஜோகூர் விரைவு ரயில் சேவை நிலையத்தில் புதிதாக அமைகிறது வர்த்தக, குடியிருப்புக் கட்டடம்

ஜோகூர் :

சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிப் பகுதிக்கும் ஜோகூர் பாருவின் புக்கிட் சகார் பகுதிக்கும் இடையே விரைவு ரயில் சேவைக்கான ரயில் பாதை கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜோகூர் பாருவில் உள்ள விரைவு ரயில் சேவை முனையத்தில் புதிய கட்டடம் ஒன்று கட்டப்பட இருக்கிறது என்றும், கடைத்தொகுதி, ஹோட்டல், குறுகிய காலத்துக்கு வாடகைக்கு விடப்படும் அடுக்குமாடி வீடுகள், சுகாதார மற்றும் கல்வி வசதிகள் உள்ளடங்கிய கட்டடத்தை MRT Corp நிறுவனமும் சன்வே குழுமமும் இணைந்து கட்டவிருக்கின்றன.

17,100 சதுர மீட்டர் பரப்பளவில் குறித்த புதிய கட்டடம் எழுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புக்கிட் சகாரில் உள்ள விரைவு ரயில் சேவை நிலையம், ஜோகூர் பாரு குடிநுழைவு வளாகம் ஆகியவற்றுடன் புதிய கட்டடம் இணைக்கப்படும். புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகள் 2033ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் வியாழக்கிழமை (பிப்ரவரி 13) ஜோகூர் பாருவில் உள்ள ‘டபள்ட்ரீ’ ஹோட்டலில் கையெழுத்திடப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கலந்துகொண்டார்.

போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் பொதுப் போக்குவரத்துச் சேவை வழங்கும் நிறுவனங்கள் கூடுதல் வருமானம் ஈட்ட புதிய வழிகளை அமைத்துத் தரவும் அரசாங்கம் இலக்கு கொண்டிருப்பதாக அமைச்சர் லோக் தெரிவித்தார். அதில் ஒரு முயற்சியாக இந்த புதிய திட்டம் அமைவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here