கோலாலம்பூர்:
மலேசியாவின் சரவாக் மாநிலம், மலேசிய ஏர்லைன்சின் துணை நிறுவனமான ‘MASwings (மாஸ்சுவிங்ஸ்)’ விமானச் சேவையைக் கொள்முதல் செய்துள்ளது.
இதன்மூலம் மலேசியாவில் தனக்கெனச் சொந்த விமானச் சேவையை வைத்திருக்கும் முதல் மாநிலம் எனும் பெருமையை சரவாக் பெற்றுள்ளது.
மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமத்துடன் சரவாக் நேற்று (பிப்ரவரி12) விற்பனை, கொள்முதல் ஒப்பந்தம் சரவாக் தலைநகர் கூச்சிங்கில் கைச்சாத்திடப்பட்டது.
‘MASwings’ பெரும்பாலும் போர்னியோ தீவில் விமானச் சேவைகளை வழங்குகிறது. மேலும் குறித்த விமானச் சேவையைக் கொள்முதல் செய்ய சரவாக் செலவிட்ட தொகை குறித்த எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
மேலும் ‘MASwings’ எனும் பெயரை ‘ஏர் போர்னியோ’வாக சரவாக் மாற்ற இருக்கிறது என்றும், அது முழுச் சேவை விமான நிறுவனமாக மாற்றப்படும் என்று சரவாக் முதல்வர் அபாங் ஜொஹாரி துன் ஒபெங் கூறியுள்ளார்.
அத்துடன் சரவாக் தனது விமானப் போக்குவரத்துத்துறையை விரிவுபடுத்த இலக்கு கொண்டுள்ளதாகவும், அதனை முன்னிட்டு, புதிய கூச்சிங் அனைத்துலக விமான நிலையம் கட்டப்படும் என்றும் அவர் சொன்னார்.





















