கோலாலம்பூர்: தாமான் டேசாவில் போலீசாரின் பாதுகாக்கப்பட்ட நிலத்தை ஒரு அடுக்குமாடித் திட்டத்திற்காக ஒரு மேம்பாட்டாளருக்கு விற்றது குறித்து பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்தி வருவதாக அதன் துணைத் தலைவர் தெரசா கோக் கூறுகிறார்.
கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL), கோலாலம்பூர் நிலங்கள் மற்றும் சுரங்க அலுவலகம், நீர்ப்பாசனம், வடிகால் துறை கூட்டாட்சி பிரதேசங்கள் துறை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளை குழு வரவழைத்து, அரசு நிலத்தை விற்பனை செய்வதற்கான நடைமுறைகளை விளக்கியுள்ளது என்று செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினரான தெரசா கோக் கூறினார்.
விசாரணைகள் நடந்து வருகின்றன. முன்னாள், தற்போதைய தலைமைச் செயலாளர்களையும் அரசாங்கம் அழைத்திருக்கிறது என்று அவர் எஃப்எம்டியிடம் கூறினார். விசாரணை முடிந்ததும், அரசாங்கத்திற்கு எங்கள் பரிந்துரைகளை வழங்குவோம்.
பிரிக்ஃபீல்ட்ஸுக்கு ஒரு காவல் நிலையம் கட்டுவதற்காக ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்ட காவல் இருப்பு நிலத்தை விற்பனை செய்வதற்கு கோக் தனது எதிர்ப்பை மீண்டும் வலியுறுத்தினார். நிலத்தை மீட்டெடுக்க மேம்பாட்டாளாருடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
கோலாலம்பூர் ஏற்கனவே நெரிசலானது, மேலும் அரசு நிலம் விளையாட்டு மைதானங்கள் அல்லது காவல் நிலையங்கள் போன்ற (பொது வசதிகளுக்காக) உள்ளது. ஆயினும், இந்த காவல் இருப்பு நிலம் சந்தை விலையை விடக் குறைந்த விலையில் மேம்பாட்டாளர்களுக்கு விற்கப்பட்டது. அது எப்படி முடியும்? என்று அவர் கூறினார்.
திங்களன்று மக்களவையில், கோக் லாட் 54780 என அழைக்கப்படும் நிலத்தை சந்தை விலையை விடக் குறைந்த விலையில் தனியார் மேம்பாட்டாளாருக்கு விற்கும் அரசாங்கத்தின் முடிவைக் கேள்வி எழுப்பினார்.
கோலாலம்பூரில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை தனியார் மேம்ப்பாட்டாளருக்கு, குறிப்பாக புதிய குடியிருப்புக் கட்டத் திட்டமிடுபவர்களுக்கு விற்பதை நிறுத்துமாறு அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார். ஏனெனில் நகரம் ஏற்கனவே அதிகமாக வளர்ச்சியடைந்து நெரிசலில் உள்ளது.








