கோலாலம்பூர்:
ஷா ஆலாம் எல்ஆர்டி3 (LRT3) ரயில் திட்டத்தின் செலவினக் குறைப்பு மற்றும் தாமதங்கள் குறித்து சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுடின் இட்ரிஸ் ஷா வெளியிட்டிருந்த அரச உரைக்கு விளக்கம் அளிப்பதற்காக, ‘மடானி’ (Madani) கூட்டரசு அரசாங்கம் சுல்தானைச் நேரில் சந்திக்க அனுமதி கோரவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
மூவார் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாட்சிமை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் கருத்துகளைத் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், இத்திட்டத்தை ரத்து செய்யாமல் அதன் செலவினங்களை மட்டுமே அரசாங்கம் சீரமைத்தது (Rationalisation) குறித்த உண்மைகளைச் சுல்தானிடம் நேரில் விளக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
2018ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்குப் பின் இத்திட்டம் 18 மாதங்கள் முடங்கியதோடு, ஐந்து ரயில் நிலையங்கள் ரத்து செய்யப்பட்டதாகச் சுல்தான் அதிருப்தி வெளியிட்டிருந்த வேளையில், தற்போதைய பிரதமர் அன்வார் இப்ராஹிம் அந்த ஐந்து நிலையங்களையும் மீண்டும் கட்ட உத்தரவிட்டுள்ளதைச் சுல்தான் பாராட்டியிருந்தார்.
இதே வேளையில், வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள 16ஆவது ஜோகூர் மாநிலத் தேர்தலில் வெளிவட்டார வாக்காளர்கள் எளிதாகப் பயணிப்பதற்காக, கோலாலம்பூர்-ஜொகூர் பாரு இடையே கேடிஎம்பி (KTMB) நிறுவனத்தின் இடிஎஸ் (ETS) மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அந்தோனி லோக் மேலும் தெரிவித்துள்ளார்.




















