ஒழுங்கற்ற மோட்டார் சைக்கிள் நிறுத்தம் தொடர்பான மலேசியர்களின் பொது ஒழுக்கக் குறைபாடு குறித்து இணையத்தில் விவாதம்

கோலாலம்பூர்:

ஷா ஆலாமில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பாக மோட்டார் சைக்கிள்கள் முறையின்றி நிறுத்தப்பட்டிருக்கும் காணொளி ஒன்று திரெட்ஸ் (Threads) சமூக ஊடகத்தில் வைரலானதைத் தொடர்ந்து, மலேசிய வாகன ஓட்டிகளின் முறையற்ற வாகன நிறுத்தப் பழக்கம் குறித்து இணையவாசிகளிடையே பெரும் விவாதம் எழுந்துள்ளது.

அருகில் முறையான மோட்டார் சைக்கிள் நிறுத்தப் பாதைகள் காலியாக இருந்தபோதிலும், உணவகத்தின் வாசலை மறித்து வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பயனர் ஒருவர், இதுவே மலேசியர்களின் முதன்மைப் பிரச்சனை எனச் சாடியுள்ளார்.

4,000-க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ள இந்த விரிவான பதிவில், “ஒருவர் தப்பு செய்தால் மற்றவர்கள் அதைப் பின்பற்றுகிறார்கள், ‘சிறிது நேரம் தானே’ என்ற அலட்சியப்போக்கும், சட்ட அமலாக்கக் குறைபாடும் தான் இதற்குக் காரணம்” எனப் பலரும் தங்களின் குமுறல்களை வெளியிட்டுள்ளனர்.

தற்காலத்தில் முறையான இடத்தில் வாகனங்களை நிறுத்தினால் நண்பர்களே கேலி செய்யும் அவலநிலை மலேசியாவில் உருவாகியுள்ளதாக மற்றொரு பயனர் ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார்.

மலேசியர்கள் சிறிதளவு தூரம் கூட நடந்து செல்ல விரும்பாத சோம்பேறித்தனமே இதற்கு முக்கியக் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள இணையவாசிகள், பொது வழிகளையும் கடைகளின் நுழைவாயில்களையும் மறிக்கும் இத்தகைய ஒழுக்கக் குறைபாட்டைக் கட்டுப்படுத்த ஊராட்சி மன்றங்கள் கடுமையான அபராதங்களை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here