தாய்லாந்து கொடூர விபத்து: 11 வயது சிறுவன் ஓட்டிய லோரி மோதி 8 பௌத்த துறவிகள் பரிதாப மரணம்

கோலாலம்பூர்:

தாய்லாந்தின் வடகிழக்கு மாகாணமான முக்தஹானில் (Mukdahan) நேற்று நடைபெற்ற ஆன்மீக நடைப்பயணத்தின் போது, 11 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோரின் அனுமதியின்றி ஓட்டி வந்த பிக்அப் (Pickup) ரக ட்ரக் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், 8 பௌத்த துறவிகள் சம்பவ இடத்திலும் மருத்துவமனையிலும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சுமார் 35 துறவிகள் மற்றும் 5 உதவியாளர்கள் சாலையில் வரிசையாகச் சென்றுகொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த அந்த வாகனம் அவர்கள் மீது மோதியதில் மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து முக்தஹான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை ஏற்படுத்திய சிறுவன் தற்போது போலீசாரின் கண்காணிப்பில் உள்ள வேளையில், அவனது பெற்றோரை நேரில் அழைத்துச் சட்டப்பூர்வ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முக்தஹான் மாகாண போலீஸ் தளபதி மேஜர் ஜெனரல் பைரோஜ் தைபுத்சா தெரிவித்துள்ளார்.

சாலைப் பாதுகாப்பிலும், பிள்ளைகளைக் கண்காணிப்பதிலும் பெற்றோர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதற்கு இந்த விபத்து ஒரு படிப்பினையாக அமைய வேண்டும் என முக்தஹான் மாகாண ஆளுநர் ஓரயான் புன்னராட் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here