முன் ஜென்ம கர்ம வினை

ஒரு சிலர் இந்த பிறவியில் என்னதான் நல்லது மட்டுமே செய்து கொண்டிருந்தாலும், அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை மட்டும் அமைவது கிடையாது. எவ்வளவு கஷ்டப்பட்டு பாடுபட்டு உழைத்தாலும்,  பணம் அவர்களுக்கு தங்குவது கிடையாது. இப்படி அவர்கள் ஏதாவது ஒரு விதத்திலாவது நிம்மதியாக அல்லது மகிழ்ச்சியாக இருப்பார்களா? என்றால் இருக்க மாட்டார்கள். இவர்களின் இந்த நிலைக்கு முன் ஜென்மத்தில் செய்த பாவ வினைகள் காரணமாக இருக்குமா? எப்படிப்பட்ட பாவங்கள் செய்பவர்களுக்கு இப்படியான தண்டனை கிடைக்கும்?
இந்த வாழ்க்கை புரியாத புதிராக இருக்கிறது. கெட்டது செய்பவர்கள் சுகபோக வாழ்க்கையையும், நல்லது செய்பவர்கள் வறுமையையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் புலம்புபவர்களா? மனிதன் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும். தெய்வத்தின் விளையாட்டு, மனிதனுக்கு புரிந்து விட்டால் வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது.
இப்பிறவியில் ஒரு மனிதன் எவ்வளவு நல்லது செய்தாலும், கஷ்டத்தை மட்டுமே அனுபவித்துக் கொண்டிருக்கிறான் என்றால், முற்பிறவி பாவங்கள் அவனை தொடர்கிறது என்று தான் சாஸ்திரங்கள் கூறுகிறது. இந்த பிறவியில் செய்த பாவங்களுக்கான தண்டனையை இந்த பிறவியிலேயே அனுபவிப்பவர்கள், அவர்களுடைய கர்மவினையின் முடிவு காலகட்டத்தில் இருப்பார்கள். முற்பிறவியில் பிறரை ஏமாற்றுவது, சூழ்ச்சி செய்து வஞ்சகத்தால் வீழ்த்துவது போன்ற செயல்களை செய்பவர்களுக்கு இப்பிறவியில் கர்மவினையானது நீடிக்கும்.
வழிவழியாக அவர்களுடைய சந்ததியையும் அது பாதிக்கும். அடுத்தவர்களின் பூர்வீக சொத்துக்களை ஏமாற்றி பிழைப்பவர்களுக்கும் இதே நிலைமை தான். கோவில் சொத்துக்களை அபகரித்து, திருடி சாப்பிடுபவர்களுக்கு அடுத்த பிறவியில் அதற்கான கர்மம் நீடித்துக் கொண்டே இருக்கும். முடிவில்லாதது இக்கர்மம் மட்டுமே. எந்த பாவங்களை செய்தாலும் இறைவனின் சொத்தை அனுபவிக்க நினைப்பவர்களுடைய பாவமானது மன்னிக்க முடியாதது.
தவறான வழியில் பணத்தை சேர்ப்பது, திருடுவது, செய்யும் தொழிலில் கலப்படம் செய்வது, மக்களின் ஆரோக்கியத்தில் விளையாடி உணவு விஷயத்தில் கலப்படம் செய்வது போன்றவர்களை, கர்ம வினை  மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். இவர்கள் எவ்வளவு நல்லது செய்தாலும், இக்காலத்தில் அவர்களால் நன்மைகளை அனுபவிக்க முடியாமல் போகும். நம்பியவர்களுக்கு துரோகம் செய்வது, பொய் பேசி பணம் சம்பாதிப்பது, கொலை செய்வது, பெண்களை மானபங்கப்படுத்துவது போன்ற விஷயங்களை புரிபவர்களுக்கு இப்பிறவியில் வறுமை நிலை தாண்டவம் ஆடும்.
குடும்ப விஷயத்தில் கணவன் மனைவி உறவிலும் நிறையவே சிக்கல்களை அனுபவிப்பார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். எல்லா திருமணங்களும் தோல்வியில் முடிவடையும். சிலருக்கு திருமண பந்தத்தில் இணைவதற்கான வாய்ப்புகளே கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். இப்படியான பிரச்சனைகளை ரொம்பவும் சந்திப்பவர்கள், முற்பிறவியில் மேலே சொல்லப்பட்டுள்ள பாவங்களை செய்திருப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.
நமக்கு நடக்கும் எல்லா விஷயத்திற்கும் ஒரு தொடர்பு உண்டு. நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பாடங்களை நமக்கு கற்பித்து விட்டு செல்வார்கள். நமக்கு மட்டும் நல்லது நடக்கவே மாட்டேன் என்கிறது என்று புலம்பாமல், நம்முடைய பாவங்களுக்கான தண்டனைகளை தான் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், இனி இந்த மாதிரியான விஷயங்களை அறிந்தும், அறியாமலும் செய்யக்கூடாது என்று பக்தி நிலையில் மூழ்கி மகாலட்சுமி தேவிக்கு பூஜைகளை செய்து வந்தால் பாப விமோசனம் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here