துரந்தருக்கு பதிலடியாக எடுக்கப்பட்ட பாகிஸ்தான் டி.வி. தொடர்… டெல்லிக்கு பதில் மும்பை – கலாய்க்கும் நெட்டிசன்கள்

மும்பை,பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பரில் வெளியான படம் ‘துரந்தர்’. இத்திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ.1,350 கோடிக்கும் மேல் வசூலித்து மெகா ஹிட் ஆனது.

அதனை தொடர்ந்து, துரந்தர் படத்தின் 2 ஆம் பாகமாக ‘துரந்தர் தி ரிவெஞ்ச்’ திரைப்படம் கடந்த மாதம் 19-ந்தேதி வெளியானது. இந்த படத்திற்கும் ரசிகர்களிடையே அபாரமான வரவேற்பு கிடைத்தது. இந்த படம் இதுவரை சுமார் ரூ.1,800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் செயல்படும் இந்திய உளவாளியின் விறுவிறுப்பான கதையை மையமாகக் கொண்டு துரந்தர் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள், குறிப்பாக நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளின் உண்மைக் காட்சிகளும் படத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

அதோடு பா.ஜ.க. அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் திட்டம் முறியடிக்கப்பட்டதாக துரந்தர் படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்திய அரசியல் மற்றும் பாகிஸ்தான் அரசியல் பற்றி உண்மை சம்பவங்களுடன் கற்பனை கலந்து துரந்தர் படத்தில் பல காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், துரந்தர் படத்திற்கு பதிலடியாக பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ‘ஜஹன்னும் பராஸ்டா ஜன்னத்’ என்ற டி.வி. தொடர் ஒன்று தற்போது இணையத்தில் இந்தியர்களால் டிரோல் செய்யப்பட்டு வருகிறது. அந்த பாகிஸ்தான் தொடர் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, அதில் டெல்லிக்கு பதிலாக மும்பை நகர்ப்பகுதி காட்டப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய உளவு அமைப்புகள் சதித்திட்டம் தீட்டுவது போல் அதில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த தொடரில் நடித்துள்ள நடிகர்கள் இந்தி மொழியுடன் உருது மொழியை கலந்து பேசுவதாகவும், இதுதான் துரந்தர் படத்திற்கு பாகிஸ்தான் கொடுக்கும் பதிலடியா? என்றும் கேட்டு இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here