மின்னியல் வணிகத்தில் பெண் தொழில்முனைவோர் ஆளுமையை அதிகரிக்க இன்று சிறப்புப் பட்டறை நடைபெற்றது. பெண்களும் ஆண்களுக்கு ஈடாக இலக்கவியல் வணிகத்தில் முன்னேற இந்தப் பட்டறையை இலக்கவியல் அமைச்சு ஏற்பாடு செய்ததாக அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
இலக்கவியல் அமைச்சின் கீழ், மலேசிய இலகக்வியல் வணிக கழகம் (MDEC) ,தேசிய இலக்கவியல் நிறுவனத்தோடு இணைந்து SMECorp மலேசியாவின் ஆதரவுடன் B40 பெண்களுக்கு இந்த ஒரு நாள் பட்டறையை ஏற்பாடு செய்திருந்தது. இதன் வழி பெண்கள், தங்களது வருமானத்தைப் பெருக்கிக்கொண்டு, இலக்கவியல் உலகில் வணிகத்தை வலுப்படுத்திக் கொள்ளலாம்.
வணிகத்துக்கும் தொழிட்நுட்பத்துக்குமான இடைவெளியைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பட்டறை அமைந்தது. இந்தப் பட்டறையில் கலந்துரையாடல், துறைசார் வணிகத்தின் அனுபவப் பகிர்வு, வணிக உத்தி, கண்காட்சி, வியாபாரச் சந்தையை அணுகும் முறை, என வணிகத்துக்குத் தேவையான முக்கிய அங்கங்கள் இடம்பெற்றன.
இதில் முக்கிய வணிக நிறுவனங்கள் Shopee, TikTok, CGC டிஜிட்டல் மற்றும் Pixlr ஆகியன இந்தப் பட்டறையில் பங்குகொண்ட பெண்களுக்கு வழிகாட்டின. இது போன்ற பட்டறைகளையும், இலக்கவியல் வணிக பயிற்சிகளையும் பிற மாநிலங்களில் நடத்த வேண்டிய அவசியத்தைத் தாம் உணர்ந்திருப்பதாகவும், இதன்வழி பெண்கள், குறிப்பாக கிராமபுறங்களில் வணிகம் செய்யும் பெண்களும் இதன் வழி பயனடைய இயலும் என தாம் நம்புவதாகவும் கோபிந்த் சிங் கூறினார். ஆக, B40-த்தைச் சேர்ந்த பெண்களும் அசுர வளர்ச்சி காணும் இலக்கவியல் வணிகத்தில் தங்களது ஆற்றலை வளர்த்துக் கொண்டு மேலும் முன்னேறலாம் என அமைச்சர் கூறினார்.
“EmpowerHer Digital என்பது வெறும் பயிற்சி திட்டம் மட்டுமல்ல, அது ஒரு இயக்கமாகும். இந்த திட்டம் B40 குழுவை சேர்ந்த பெண்களுக்கு வணிகத்துக்குத் தேவையான இலகக்வியல் வழிகாட்டுதலை வழங்குகிறது. இந்தப் பட்டறையில், மின்னியல் தொழில்நுட்பத்தில் வியக்க வைக்கும் சாதனைகள் புரிந்த பெண்கள் தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
அதில், மின்னல் வணிகத்தில் மூக்கில் விரல் வைக்கக் கூடிய அளவிற்கு வந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய Hers Manufacturing நிறுவனர் அமுதா சுப்பிரமணியம், இந்திய பெண்கள் மின்னியல் வணிகத்தில் தயங்காமல் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதன்வழி பெண்கள் போட்டியாற்றல்மிக்க வணிகத்தை உருவாக்க முடியும். நாட்டின் இலக்கவியல் பொருளாதார வளர்ச்சியை எளிதாக்கும் வகையில், MDEC எனப்படும் மலேசிய இலக்கவியல் வணிக கழகம் பெண்களை வெறும் தொழில்நுட்பப் பயனர்களாக மட்டும் அல்லாமல், மின்னியல் பொருளாதாரத்தில் புதுமைகளைப் புகுத்தி, முன்னேற்றும் சக்தியாக மாற்றுவதை உறுதி செய்கிறது என மலேசிய இலக்கவியல் வணிக கழகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி அனுவார் பாரிட் பட்சில் தெரிவித்தார்.
2021 வரவு செலவு திட்டத் தரவுகளின்படி, இ-காமர்ஸ் தளங்களில் ஆண்களுக்ம் பெண்களுக்குமான வணிக எண்ணிக்கையின் இடைவெளி பெரிதாக இருப்பதாக காட்டுகிறது. 2021ஆம் ஆண்டில் 654,530 ஆண் வணிகர்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கும் வேளை, அதே ஆண்டில் பெண் வணிகர்கள் வெறும் 280,100 பேர் மட்டுமே உள்ளனர்.
இது, இ-காமர்ஸ் துறையில் அதிக பெண்களை ஈடுபடுத்துவதற்கு வித்திடுகிறது. EmpowerHer Digital 2025 திட்டத்தின் அறிமுகம், பெண்களை டிஜிட்டல் பொருளாதாரத்தில் பலப்படுத்த அரசாங்கத்திற்கும் தனியார் துறைக்கும் இடையிலான கூட்டு முயற்சியை இது வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர் கோபிந் தெரிவித்தார். அதிக வாய்ப்புகளைக் கொண்ட மின்னியல் வணிகத்தின் வழி B40-த்தைச் சேர்ந்த பெண்கள் தங்களது போட்டியாற்றலை வளர்த்துக் கொள்ளும் அதே வேளை தங்களது குடும்பத்தை பெருளாதார ரீதியில் மேம்படுத்திக் கொள்வதோடு, இந்திய சமுதாயத்தின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிபடுத்தவும் பெரும் பங்காற்றும் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் கூறினார்.