கோலாலம்பூர்:
கோலாலம்பூர், ஜாலான் அம்பாங் பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் நிகழ்ந்த கார் விபத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்தனர். மது போதையில் கார் ஓட்டிய நபரால் இந்த விபத்து ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் பலியானவர்கள் 61 வயதான ஏ. துரைசிங்கம் மற்றும் அவரது மனைவி 56 வயதான ஏ. மேனகா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேனகா பணியாற்றும் தனியார் மருத்துவமனைக்கு அவரை துரைசிங்கம் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இவர்களுக்கு பவித்ரா (24), சதீஸ்வரன் (26) மற்றும் சேரன் (19) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
மேனகா தனது வாழ்நாள் முழுவதும் உழைத்து, ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஒரு புதிய வீட்டிற்கு முன்பணம் செலுத்தியிருந்தார். அந்த வீட்டின் அடிப்படைப் பணிகளை முடித்துவிட்டு குடியேறத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த விபத்து அவரது கனவைச் சிதைத்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் மேனகா தனது 30 ஆண்டு காலப் பணியை நிறைவு செய்யவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டப்படிப்பை முடித்துள்ள பவித்ரா, தனது பெற்றோர் மிகவும் பாசமானவர்கள் என்றும், தங்களுக்கு முன்னுதாரணமாக இருந்தவர்கள் என்றும் கண்ணீருடன் தெரிவித்தார். “ஒரே நிமிடத்தில் இரண்டு பேரையும் இழப்பதை ஏற்க முடியவில்லை” என்று உறவினர்கள் ஆவேசத்துடன் கூறியுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மது அருந்தியிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது இரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. காரில் இருந்த மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள CCTV காட்சிகள் மற்றும் காரின் டேஷ்கேம் (Dashcam) பதிவுகள் மூலம் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
குடிபோதையில் வாகனம் ஓட்டிய அலட்சியத்தால் ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி பறிபோயுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




















