கோலாலம்பூர்:
உலகில் தற்போது வர்த்தக ரீதியான பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்தால், உலகளாவிய ஸ்மார்ட்போன்களின் விலை, குறிப்பாக ஐபோன் போன்ற உயர் ரக மாடல்களின் விலை, உயரக்கூடும் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஒரு ஐபோனின் விலை ஒரு காரின் விலைக்கு உயருவதற்கு சாத்தியமில்லை என்றார் அவர்.
ஐபோன் உற்பத்திக்கான கூறுகள் உலகம் முழுவதிலுமிருந்து வருகின்றன. இதில் தைவானில் இருந்து சிப்கள், தென் கொரியாவில் இருந்து அதன் ஸ்கிரின், சீனாவில் இருந்து பேட்டரிகள், அமெரிக்காவிலிருந்து மோடம்கள் மற்றும் நினைவகம், ஜப்பானில் இருந்து சேமிப்பு மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து கேமராக்கள் ஆகியவை அடங்கும். மேலும் இவை இறுதியில் சீனாவில் இணைக்கப்படுகின்றன.
ஒரு ஐபோனின் விலை US$549.73 (RM2,424) என்றும், 145 சதவீத வரி விதிக்கப்பட்டால், அது US$1,400 (RM6,174) ஐ எட்டக்கூடும் என்றும் தெங்கு ஜஃப்ருல் கூறினார்.
அதே நேரத்தில் இந்த ஐபோன் முழுமையாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டால், அதன் விலை US$3,500 அல்லது RM16,000 ஐ எட்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அமெரிக்காவில் விலைகள் உயரும்போது, உலகளாவிய ஐபோன் விலைகள் பொதுவாக அமெரிக்க விலைகளைப் பின்பற்றுவதால், மற்ற நாடுகளும் பாதிக்கப்படுகின்றன.
முன்னதாக, அமெரிக்கா ஐபோன்களுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீதான வரி முடிவைத் தொடர்ந்து ஐபோன்களின் விலை 30 முதல் 43 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

























