கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21- ஆம் தேதி வாதிகானில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று முனதினம் மாலை வரை 90 ஆயிரத்துக்கு அதிகமானோர் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் போப் ஆண்டவரின் உடல் வைக்கப்பட்ட பெட்டி சீல் செய்யப்பட்டது. இன்று உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடக்கிறது. பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.
போப் ஆண்டவரின் உடல் புனித பீட்டர் பேராலயத்தில் இறுதிச்சடங்குகளை முடித்து புனித மேரி பசிலிக்காவுக்கு கொண்டு வந்ததும், ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோரை கொண்ட ஒரு குழுவினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. போப் பிரான்சிஸ், தனது பதவிக்காலம் முழுவதும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக வாடிகன் கூறியுள்ளது.




















