Carigali நிறுவனத்திற்கான சரவாக்கின் லைசென்ஸ் சட்டம் மோதலை ஏற்படுத்தும் அபாயகரமான முன்னுதாரணம்-ஆய்வாளர் கூறுகிறார்

(By BR.Rajan)

கோலாலம்பூர்

தன்னுடைய மிரி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சரவாக் மாநில அரசாங்கத்திடமிருந்து லைசென்ஸ் பெற வேண்டும் Petronas Carigali Sdn. Bhd. நிறுவனத்தை கட்டாயப்படுத்தும் சரவாக்கின் முயற்சி நாடு முழுமையிலும் செயல்படும் எண்ணெய், கியாஸ் நிர்வாகங்களுக்கு ஓர் ஆபாயகரமான முன்மாதிரியை அமைத்துவிடும்.

பெட்ரோனாசின் துணை நிறுவனமான Carigali மாநிலத்தின் 2016 கியாஸ் விநியோக சட்டம் பிரிவு 7 (e)-ஐ மீறியிருக்கிறது என்று ஏப்ரல் 30 ஆம் தேதி அனுப்பி இருக்கும் ஒரு கடிதத்தில் சரவாக் மராமத்து, தொலைத்தொடர்பு அமைச்சு குற்றஞ்சாட்டி இருக்கிறது.

சரவாக் மாநில லைசென்ஸ் இன்றி Carigali தன்னுடைய Miri Crude Oil Terminal (MCOT) வேலையை செய்துக்கொண்டிருக்கிறது என்று அக்கடிதத்தில் குற்றஞ்சாட்டி இருக்கிறது. 21 நாட்களுக்குள் இத்தவறை சரிசெய்ய வேண்டும். தவறினால் அச்சட்டத்தின் பிரிவு 21 A கீழ் நிதி அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரிக்கை விடுத்திருக்கிறது ஆய்வாளர் ஜமில் கனி கூறினார்.

மலேசிய பெட்ரோலியம் ரிசோர்சர்ஸ் கார்ப்பரேஷன் முன்னாள் அதிகாரியான ஜமில் கனி, சரவாக்கின் இந்நடவடிக்கையானது கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மத்திய – மாநில முறைமையில் மிகப் பெரிய உரசலை ஏற்படுத்திவிடும் என்றார்.

மத்திய அரசாங்கம் வழங்கியிருக்கும் அதிகாரத்தின் கீழ் MCOT பல தசாப்தங்களாக செயல்பட்டு வருகிறது. அப்படியே பெட்ரொனாஸ் மாநில அரசாங்கத்திடம் இப்போது ஒரு லைசென்ஸுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டியதாக இருந்தால் இதே நடைமுறையை பின்பற்ற வேண்டும் மற்ற மாநிலங்களும் கேட்காது என்பது என்ன நிச்சயம்? இது ஓர் அபாயகரமான முன் மாதிரியாகிவிடும்.

ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் உருவாக்கும் காட்சியை நாம் காண வேண்டியிருக்கும். இது ஒரு ஒழுங்கு முறையின் சிம்ம சொப்பணமாகிவிடும் என்று ஜமில் கனி தெரிவித்தார்.

இக்கடிதமானது இவ்வாண்டு தொடக்கத்தில் மத்திய – மாநில அரசாங்கங்களின் ஒப்பந்த அம்சங்களை பலவீனப்படுத்துவதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மத்திய – மாநில சட்டங்கள் தொடர்ந்து நிலைப்பெற்றிருக்கும் வகையில் பிரதமர் நாடாளுமன்றத்தில் சமச்சீரான ஏற்பாடுகளை கோடிட்டுக் காட்டினார். ஆனால் இக்கடிதம் முற்றிலும் அதனை திசை மாற்றி இருக்கிறது. ஒரு சுமூகமான உடன்பாட்டை மோதலாக மாற்றி இருக்கிறது என்றார் அவர்.

சரவாக் மாநிலத்தில் கியாஸ் நிர்வாகம் தொடர்பில் மத்திய அரசாங்கமும் சரவாக் மாநில அரசாங்கமும் சில முக்கிய கொள்கைகளில் இணக்கம் கண்டிருப்பதாக கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

1974 பெட்ரோலியம் சட்டம் (PDA) சரவாக் உட்பட நாடு முழுமையிலும் எண்ணைய், கியாஸ் தொழில் துறையில் பிரதான சட்டமாக இருக்கும் தொடர்ந்து நிலைப்பெற்றிருப்பதும் அதில் அடங்கி இருக்கிறது.

ஆய்வாளர் ஜமில் கனி

அதேசமயம், மாநிலத்தின் 2016 கியாஸ் விநியோக சட்டத்தின் (DGO) கீழ் சரவாக்கின் விருப்பங்களும் அங்கிகரிக்கப்பட்டிருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.

இது தவிர பெட்ரோனாஸும் அதன் துணை நிறுவனங்களும் தற்போது அவற்றின் வசம் வைத்திருக்கும் அனைத்து ஒப்பந்தப் பொறுப்புகளையும் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. இவற்றில் அனைத்துலக விநியோக ஒப்பந்தங்களும் அதில் அடங்கும்.

பெட்ரோனாஸின் துணை நிறுவனங்கள் சரவாக்கில் செயல்படுவதற்கு கூடுதல் லைசென்ஸ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதும் அந்த ஒப்புக்கொள்ளப்பட்ட அந்த உடன்பாட்டில் அடங்கும்.

இந்த உடன்பாடானது நிலைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கத்திலானது என்று ஜமில் தெரிவித்தார்.

இந்த விவகாரத்திற்கு தீர்வுக் காண்பதற்காக இந்த உடன்பாட்டிற்கு இணக்கம் காணப்பட்டது. பெட்ரோனாஸ் கூட்டரசு சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. 1974 பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டத்துடன் இணைந்து DGO வாசிக்கப்பட வேண்டும். இதற்கு எதிர்ப்பதமாக செயல்படக் கூடாது. பெட்ரோனாஸின் சட்ட விதிகளை பலவீனப்படுத்தாமல் சரவாக்கின் பங்கை மத்திய அரசாங்கம் அங்கிகரிக்கிறது.

இந்நிலையில் சரவாக் திடீரென அந்தர்பல்டி அடித்து “நீங்கள் லைசென்ஸ் பெறவேண்டும். தவறினால் அபராதம் விதிப்போம்” என்று பிடிவாதம் பிடிப்பது குழப்பத்தைதான் ஏற்படுத்தும் என்று ஜமில் குறிப்பிட்டார்.

இதற்கு மத்தியில் தனது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கியாஸ் விநியோக நடவடிக்கைகளுக்கு மாநில அரசாங்கம் முழு அதிகாரம் கொண்டிருக்கிறது என்று சரவாக் பிரிமியர் டான்ஸ்ரீ டாக்டர் அபாங் ஜொஹாரி ஓப்பெங் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

சரவாக்கின் வளங்கள் சரவாக் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திட்டங்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறிவருகிறார்.

பெட்ரோனாஸுடன் செய்துக்கொள்ளப்பட்டிருக்கும் எந்த ஓர் ஏற்பாடும் சரவாக்கின் நிறுவனமான பெட்ரோசின் பங்கை எதிர்மறையாக பாதிக்கக் கூடாது என்று அவர் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

இந்த சட்ட கவலைகளுக்கு அப்பால் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் சர்ச்சை முதலீட்டாளர்களுக்கு ஒரு தவறான செய்தியை சொல்லி விடக்கூடாது. முதலீட்டாளர்கள் இந்த விவகாரத்தை மிக அணுக்கமாக பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கமும் தனித்தனி இலக்குகளில் இழுத்துக்கொண்டிருந்தால் மலேசியாவின் எரிசக்தி நிர்வாகம் மீதான நம்பிக்கையை பலவீனப்படுத்திவிடும் என்று ஜமில் குறிப்பிட்டார்.

இந்நிலைமைக்கு தீர்வு காணாமல் விட்டுவிட்டால் அரசியலமைப்புச் சட்டத்திற்கே பெரும் சோதனை ஆகிவிடும். பெட்ரோனாஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டம் DGO சட்டத்தை மீறுகிறதா அல்லது DGO பெட்ரோலியம் மேம்பாட்டு சட்டத்தை மீறுகிறதா என்று நீதி பரிபாலனத் துறை கேள்வி எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இது அனைத்து எண்ணைய் உற்பத்தி மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்துவிடும்.

ஏப்ரல் 30 என தேதியிடப்பட்ட கடிதத்திற்கு பெட்ரோனாஸ் வெளிப்படையாக பதில் அளிக்கவில்லை. ஆனால் மத்திய – மாநில அதிகாரிகள் அமைதியாக இதற்கு தீர்வுக்காணும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக பெட்ரோனாஸுக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் நம்பிக்கையை நிலை நிறுத்துவதற்கு மத்திய – மாநில அரசாங்கங்களின் கூட்டு விளக்கமளிப்பு தேவை என்று ஜமில் நம்புகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here