( By: Editor BR. Rajan )
புத்ராஜெயா,
புறநகர், வட்டார மேம்பாட்டுத்துறை அமைச்சு, அதன் இலாகாக்கள், ஏஜென்சிகள் ஆகியவற்றில் பணிபுரியும் 28,211 பணியாளர்களின் அர்ப்பணிப்பும் கடப்பாடும் பாராட்டுக்குரியது என்று அதன் அமைச்சரும் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி புகழாரம் சூட்டினார்.

இவர்களின் உறுதியான கடப்பாடும் கடுமையான உழைப்பும் அமைச்சின் பல்வேறு திட்டங்கள் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்திருக்கின்றன. புறநகர்களில் வாழும் மக்களின் வாழ்வியல் மேம்பாடு, வறுமை துடைத்தொழிப்புத் திட்டங்கள், பூர்வீகக்குடி சமுதாயத்தினரின் வாழ்க்கை மேம்பாடு, சபா – சரவாக் மக்களின் நல்வாழ்வு ஆகியவற்றில் இவர்களின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.

ஒவ்வொருவரும் தனித்தனியாகத் தமக்கு அறிமுகம் இல்லை என்ற போதிலும் அவர்களின் பங்களிப்பைத் தாம் வெகுவாக மதிப்பதாக குறிப்பிட்ட அவர், குறிப்பாக பணி ஓய்வுபெற்று விட்டாலும் அமைச்சுக்குப் பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புமிக்கச் சேவைகளை வழங்கி வருவதையும் தாம் உணர்ந்திருப்பதாகச் சொன்னார்.
இங்கு புத்ராஜெயாவில் டேவான் ஸ்ரீ லெஸ்தாரியில் மே 15ஆம் தேதி நடைபெற்ற அமைச்சின் 2024 நனிச்சிறந்த சேவை விருது, பாராட்டு நிகழ்ச்சியில்ஸாஹிட் ஹமிடி உரையாற்றினார். மொத்தம் 89 பேர் ஏபிசி எனப்படும் நனிச்சிறந்த சேவை விருதைப் பெற்ற நிலையில் மாராவைச் சேர்ந்த ஒருவர் பிபிசி எனப்படும் சிறந்த சேவை விருதைப் பெற்றனர். இவர்கள் அனைவரும் 2024ஆம் ஆண்டு முழுமையிலும் மிகச்சிறந்த சேவையாற்றியதற்கு ஓர் அங்கீகாரமாக சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கப்பட்டன என்றார்.
மேலும் அமைச்சின் 7 பணி ஓய்வு பெற்ற பணி யாளர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவர்கள் அனைவரும் 2024ஆம் ஆண்டு பணி ஓய்வுபெற்ற நிலையில் 2025 மேலும் ஐவர் ஓய்வு பெற்றவர்களாவர். பொதுச்சேவைத்துறையில் உருமாற்றத்தை அமல்படுத்துவோம் என்ற கருப்பொருளோடு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பொதுச்சேவையில் மிக நேர்த்தியான, துரிதமான, அர்த்தம் பொதிந்த சேவைகளை வழங்குவதைத் தொடர வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோட்பாடுகளுக்கு இணங்க சேவைத்தரத்தை உயர்த்துவதோடு மக்களுக்கு அது விரைந்து சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும் என்று ஸாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டார்.

அதேவேளையில் அமைச்சின் பணிகள், சேவைகள் சிறக்க புத்தாக்கம், டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்றவற்றிலும் அமைச்சின் பணியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். பணி ஓய்வுபெற்றவர்கள் வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்கின்றனர். அவர்களின் சேவைகளுக்குத் தாம் நன்றி சொல்வதாக துணைப்பிரதமர் குறிப்பிட்டார். நனிச்சிறந்த கலாச்சாரத்தை அமைச்சின் பணியாளர்கள் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும். அதேசமயம் புறநகர் மேம்பாட்டிற்கான திட்டங்களிலும் அதீத கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஸாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டார்.









