பினாங்கில் இஸ்லாம் அல்லாத ஆறு சட்டவிரோத வழிபாட்டு தலங்களுக்கு எதிராக நடவடிக்கை

கோலாலம்பூர்:

பினாங்கில் முறையாகப் பதிவு செய்யாமல் சட்டவிரோதமாக இயங்கி வரும் 6 இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களின் மீது (RIBI) அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகப் பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் லிம் சீவ் ஹிம் தெரிவித்துள்ளார்.

பினாங்கில் சட்டவிரோதமாகவும் அரசாங்க நிலத்தில் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வரும் வழிபாட்டுத் தலங்களைப் பினாங்கு மாநில அரசு கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக PAS கட்சியின் பெர்மாதான் பாசிர் சட்டமன்ற உறுப்பினர் அமீர் ஹம்சா அப்துல் ஹாசிம் குற்றம் சாட்டிய நிலையில், அவருக்கு பதிலளிக்கும் விதமாக நேற்று நடந்த பினாங்கு மாநிலச் சட்டமன்ற கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் இதுவரையில் பினாங்கு மாநில அரசு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டதில் 6 இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் முறையான அனுமதியில்லாமல் இயங்கி வருவது உறுதிச் செய்யப்பட்டிருப்பதாகவும், அவை வடக்கு செபெராங் பிறையில் 1, தென் செபெராங் பிறையில் 2, மத்திய செபெராங் பிறையில் 2, வடக்கிழக்கு மாவட்டத்தில் 1 என மொத்தம் 6 வழிபாட்டுத் தலங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என லிம் கூறினார்.

இது சமய விவகாரம் என்பதால் முழுமையான விசாரணைக்குப் பின்னரே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் முறையாகப் பதிவு செய்யாமல் இயங்கி வரும் வழிபாட்டுத் தலங்களின் மீது மட்டுமே மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here