கோலாலம்பூர்,
குடும்ப அமைப்புக் கொள்கைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்ள மலேசியாவும் துருக்கியும் முனைப்புக்காட்டுகின்றன என்று மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்தார்.
இது தொடர்பில் இரு நாடுகளுக்குமிடையே புரிந்துணர்வு உடன்பாடு கையெழுத்தானது. ஒரு நிறைவான சமூகச் சேவையைக் கொண்டு வருவதற்கும் இதன்மூலம் பரிந்துரை முன்வைக்கப்பட்டிருக்கிறது. துருக்கி நாட்டின் குடும்ப சமூகச் சேவைத்துறை அமைச்சர் மஹிநுர் ஆஸ்டெமிர் கொக்தாசுடன் நடத்திய சந்திப்பில் இந்த விஷயம் விரிவாக விவாதிக்கப்பட்டது என்று நான்சி சொன்னார். குடும்ப அமைப்பு, பிறப்பு விகிதச் சரிவு, குடும்ப அமைப்பில் ஏற்படும் மாற்றம் போன்ற பிரச்சினைகளில் ஏற்படக்கூடிய கூட்டுச் சவால்கள் குறித்து இரண்டு நாடுகளும் விவாதித்தன என்றும் அவர் சொன்னார்.
துருக்கி நாட்டில் புதிதாகத் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும் சலுகைகள் குறித்து நாங்கள் பகிர்ந்து கொண்டோம். அதேசமயம் மலேசியாவில் பிறக்கும் குழந்தைக்கான சேமிப்புத் திட்டம், திருமண அமைப்பை வலுப்படுத்தும் முயற்சிகள் போன்றவையும் இந்தச் சந்திப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்டன என்று அவர் நேற்றுத் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
சிறார்கள், முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான கவனிப்புச் சேவை, பெண்களுக்கான டிஜிட்டல்துறை ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கு புரிந்துணர்வு உடன்பாட்டை ஏற்பாடு செய்யவும் மலேசியா பரிந்துரை செய்தது என்று நான்சி கூறினார்.
ஒரு நிறைவான சமூக மேம்பாட்டை வலுப்படுத்துவதில் மலேசியா முனைப்புக்காட்டி வருவதற்கு ஏற்ப இந்த முயற்சிகள் அமைகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.







