மை கியோஸ் தொடர்பான ஆவணங்கள் எம்ஏசிசியில் ஒப்படைப்பு வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு நடவடிக்கை .

புத்ராஜெயா,

வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு நேற்று மை கியோஸ் திட்டம் தொடர்பான ஆவணங்களை எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைத்தது. ஊராட்சித்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ஃபட்ஸ்லி முகமட் கெனாலி இந்த ஆவணங்களை நேற்று எம்ஏசிசியில் ஒப்படைத்தார்.

மை கியோஸ் தொடர்பான ஆவணங்களைத் தங்கள் தரப்பு தாங்களாகவே முன்வந்து எம்ஏசிசியில் சமர்ப்பித்திருக்கிறது எனவும் ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அமைச்சு வெளியிட்ட அறிக்கை கூறியது. எம்ஏசிசி தரப்பு எந்த வேண்டுகோளையும் முன்வைக்கவில்லை என்றாலும் நாங்கள் அந்த ஆவணங்களை அவர்களிடம் சமர்ப்பித்திருக்கிறோம் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இந்தத் திட்டத்தில் வெளிப்படையான தன்மையும் நெறிமுறைகளும் இருப்பதை உறுதி செய்வதில் அமைச்சு முனைப்புக் காட்டுகிறது என்றும் அவர் சொன்னார். மை கியோஸ் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டி இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சின் இந்த நடவடிக்கையானது உயர்நெறியுடன் நிர்வாகம் செய்வது என்ற கொள்கைகளை அனுசரிப்பதாக இருக்கிறது. அதேசமயம் வலுவான நிர்வாக மேலாண்மையையும் கொண்டிருப்பதில் அமைச்சின் உயர்நிலைக் கடப்பாட்டையும் இது நிரூபிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மை கியோஸ் திட்ட அமலாக்கத்தில் எந்தவோர் அதிகாரத் துஷ்பிரயோகமும் நிதி முறைகேடும் நிகழவில்லை என்பதை அமைச்சு உறுதி செய்கிறது. சிறு வணிகர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் மை கியோஸ் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. முறையான நடைமுறைகளைப் பின்பற்றியே மிகத் துல்லியமாகவும் உயர்நெறியுடனும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு செயல்முறையும் மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் சிறந்த நிர்வாக மேலாண்மைப் பார்வையில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்று அமைச்சின் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 133 ஊராட்சித்துறைகளில் மை கியோஸ் திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. திறந்த டெண்டர் மூலம் குத்தகையாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்த அடிப்படையில் நாடு முழுமையிலும் உள்ள ஊராட்சித்துறைகள் மொத்தம் 795 குத்தகையாளர்களை நியமனம் செய்துள்ளது. மை கியோஸ் 2.0 திட்டத்திற்கான உச்சவரம்பு விலை 25 ஆயிரம் ரிங்கிட். இது ஒரு நியாயமான கட்டணம் என்பதையும் அமைச்சு அதன் அறிக்கையில் தெளிவுபடுத்தி இருக்கிறது. இவ்விவகாரத்தில் எவ்வித நிதி முறைகேடுகளும் அதிகாரத் துஷ்பிரயோகங்களும் இல்லை என்றபோதிலும் அமைச்சு தானாகவே முன்வந்து எம்ஏசிசியிடம் இதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்திருக்கிறது. இதில் தன்னார்வ முறையில் அமைச்சின் பணியாளர்களும் முழு அளவில் ஈடுபாடு கொண்டு தேவையான அனைத்து ஆவணங்களையும் எம்ஏசிசியில் சமர்ப்பிப்பதற்குத் துணை புரிந்திருக்கின்றனர். அவர்களுக்கு அமைச்சு நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here