ஜகார்த்தா:
சுமத்ரா தீவு அருகே இன்று வெள்ளிக்கிழமை (மே 23) ரிக்டர் அளவில் 5.7 எனப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்தது.
இதில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமுற்றன. ஆனால் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.52 மணிக்கு பெங்குலு மாநிலம் அருகே 68 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டதாக அந்நிலையம் தெரிவித்தது.

இந்நிலையில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 எனப் பதிவானதாகவும், 84 கிலோமீட்டர் ஆழத்தில் அது மையம் கொண்டதாகவும் இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது. இருப்பினும் சுனாமி ஏற்படும் சாத்தியம் இல்லை என்று அது கூறியது.
மாநிலத் தலைநகர் பெங்குலு நகரில் 100க்கும் மேற்பட்ட வீடுகளும் குறைந்தது ஆறு பொது இடங்களும் நிலநடுக்கத்தால் சேதமுற்றதாக தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுப் பேச்சாளர் அப்துல் முஹாரி கூறினார்.




















