கோலாலம்பூர்:
நாட்டில் போலி மருந்துகள் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உரிமம் இல்லாமல் 6,000க்கும் அதிகமான மருந்துப் பெட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட 4.8 மில்லியன் வெள்ளி என்று அவர்கள் கூறினர்.
மலேசியாவில் தொடர்ந்து அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் போலி மருந்துகள் ஆங்காங்கே விற்பனையில் உள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர்.
இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மலேசியச் சுகாதார அமைச்சு அமலாக்க நடவடிக்கைகளை வேகப்படுத்தியுள்ளது.
அதேபோல் இணையத்திலும் கடைகளிலும் போலி மருந்துகளை மக்கள் வாங்காமல் இருக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் அமைச்சு மேற்கொண்டு வருகிறது.
போலி மருந்துகளை விற்பனை செய்பவர்கள் மக்களின் பொதுநலன் கருதாமல் லாபத்தை மட்டும் குறியாக வைத்துக் குற்றச்செயலில் ஈடுபடுவதாக மருந்துகளுக்கான அமலாக்கத்துறை
தெரிவித்துள்ளது.
சமீபத்தில் போலி முத்திரைகள் கொண்டு போலியான மருந்துகள் இணையத்தில் விற்கப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் அதனுள்ளே இருக்கும் வேதிப்பொருள்களின் தரம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
பொதுவாக போலியான மருந்துகளில் அதன் வேதிப்பொருள்கள் குறித்த விவரங்கள் சரியாக இருக்காது.
வேதிப்பொருளின் அளவு அதிகமாக இருக்கலாம், சுகாதாரச் சிக்கலைத் தரும் வேதிப்பொருள் மருந்தில் கலக்கப்படலாம் என்று அதிகாரிகள் கூறினர்.





















