இந்தியத் தற்காப்புத்துறை துணையமைச்சர் சஞ்சய் சேத் மலேசிய இந்தியர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

கோலாலம்பூர், 

லங்காவி தீவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லீமா வான்வெளி கடல்சார் அனைத்துலகக் கண்காட்சியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள வருகை தந்த சுமார் 250 பேராளர்களுக்கு தலைமை தாங்கி மலேசியாவுக்கு வருகை புரிந்த இந்தியத் தற்காப்புத்துறை துணையமைச்சர் சஞ்சய் சேத் தனது குறுகிய வருகைக்கிடையில் கோலாலம்பூரில் மலேசிய இந்தியப் பிரமுகர்களையும் இந்திய இயக்கங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்தார்.

 கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் தலைநகரிலுள்ள ஒரு பிரபல தங்கும் விடுதியில் தேநீர் விருந்துபசரிப்புடன் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (மே 22) பிற்பகலில் நடத்தப்பட்ட இந்தச் சந்திப்பில் இந்தியத் தற்காப்புத்துறை துணையமைச்சர் சஞ்சய் சேத் சுமார் அரை மணி நேரம் இந்தியிலும் ஆங்கிலத்திலும் உரை நிகழ்த்தினார்.

தனது உரையில் அண்மையில் ஆப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் அவற்றுக்கான காரணங்கள் குறித்தும் சஞ்சய் சேத் தனதுரையில் விரிவாக எடுத்துரைத்தார்.தனக்கு மிகக் குறுகிய கால இடைவெளியே இருந்தபோதும் நிகழ்ச்சிக்குப் பின்னர் உடனடியாக விமானம் மூலம் புதுடெல்லி திரும்ப வேண்டியிருந்தாலும் மலேசியாவிலுள்ள இந்திய சமூகத்தினரைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பியதாகவும் அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாகவும் துரிதமாகவும் செய்து முடித்த இந்தியத் தூதரையும் தூதரக அதிகாரிகளையும் பாராட்டுவதாகவும் சஞ்சய் சேத் தனதுரையில் கூறினார்.அவரின் உரைக்கு முன்னதாக இந்தியத் தூதர் பி.என்.ரெட்டி வரவேற்புரை நிகழ்த்தினார். குறுகிய கால அவகாசத்திற்கிடையிலும் மலேசிய இந்திய சமூகத்தின் பிரதிநிதிகளைச் சந்திக்க ஆர்வம் காட்டிய இந்தியத் தற்காப்புத்துறை துணையமைச்சர் சஞ்சய் சேத்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட பி.என்.ரெட்டி, அந்தக் குறுகியகால அவகாசத்திலும் இந்த சந்திப்பு நிகழ்ச்சியை சிறப்புற ஏற்பாடு செய்த துணைத் தூதர் சுபாஷினி நாராயணனையும் தூதரக அதிகாரிகளையும் பாராட்டினார்.நிகழ்ச்சியின் இறுதியில் மலேசியாவுக்கான துணை இந்தியத் தூதர் சுபாஷினி நன்றி தெரிவித்துக் கொண்டார். பத்திரிகையாளர்கள், பல்வேறு இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தச் சந்திப்புக் கூட்டத்தில் பின்னர் சஞ்சய் சேத் குழுப்படங்களும் எடுத்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here