கோலாலம்பூர்:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவராக சமீபத்தில் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட அசாம் பாக்கியை பதவி விலகக் கோரி நேற்று இரவு டத்தரான் மெர்டேக்காவில் சுமார் 60 போராட்டக்காரர்கள் இணைந்து பேரணி நடத்தினர்.
சுவாராம், தேர்தல் சீர்திருத்தக் குழு பெர்சே போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மூடா மற்றும் பார்ட்டி சோசியாலிஸ் மலேசியா (PSM) போன்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 60 பங்கேற்பாளர்கள் இரவு 8 மணிக்குப் பிறகு சோகோ ஷாப்பிங் வளாகத்தில் இருந்து டத்தரான் மெர்டேக்காவிற்கு பேரணியாகச் சென்றனர்.
அரசாங்கம் அதிக வெளிப்படைத்தன்மையை கொண்டிருக்க வேண்டும் என்றும், ஊழல் தடுப்பு நிறுவனத்தை அரசியல் ஆயுதமாக்க வேண்டாம் என்றும் Muda கட்சி செயல் தலைவர் அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸ் அழைப்பு விடுத்தார்.
“அசாம் பாக்கியை நிராகரிக்க மக்கள் கூடுவது இது முதல் முறை அல்ல. அமைச்சர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளைப் பாதுகாக்க MACC ஐப் பயன்படுத்த வேண்டாம்,” என்றும் அவர் கூட்டத்தில் கூறினார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹாக்கின் மரணம் குறித்த விசாரணையில் “மேலும் நடவடிக்கை இல்லை” என்று வகைப்படுத்த முடிவு செய்ததற்கு விளக்கம் கோருவதாக தேசிய இளைஞர் கூட்டமைப்பின் பிரதிநிதி ஹம்டின் நோர்டின் தெரிவித்தார்.
மே 22 அன்று, அட்டர்னி ஜெனரல் அலுவலகம், காவல்துறையின் புதிய விசாரணைக் கட்டுரையை ஆய்வு செய்ததாகவும், தியோவின் மரணத்திற்கு யாரையும் காரணம் காட்ட போதிய ஆதாரங்கள் இல்லாததைக் கண்டறிந்ததாகவும் கூறியது.
முன்னதாக MACC அதிகாரிகளால் பல மணி நேரம் விசாரிக்கப்பட்ட பின்னர், ஷா ஆலமில் உள்ள பிளாசா மசாலமின் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து தியோ ஜூலை 16, 2009 அன்று இறந்து கிடந்தார் என்பது நினைவுகூறத்தக்கது .























