“அமெரிக்கா பணிய வேண்டியிருந்தது”: போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ஈரான் அதிரடி கருத்து!

தெஹ்ரான்:

அமெரிக்காவுடனான மோதலில் ஈரான் போர்க்களத்தில் வெற்றி பெற்றுள்ளதாகவும், தனது நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதால்தான் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் ஈரானிய நாடாளுமன்ற நாயகர் முகமட் பகேர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) தெரிவித்துள்ளார்.

ஈரான் தேசியத் தொலைக்காட்சியில் நேற்று (ஏப்ரல் 18) ஆற்றிய உரையில் காலிபாஃப் பின்வருவனவற்றை வலியுறுத்தினார்: ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) உள்ளிட்ட முக்கிய கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகள் இப்போதும் ஈரானின் முழுமையான கட்டுப்பாட்டில்தான் உள்ளன.

இந்தப் போரில் அமெரிக்கா தனது இலக்குகள் எதனையும் அடையவில்லை. மாறாக, ஈரானின் கோரிக்கைகளுக்குப் பணிந்து போவதை அன்றி அமெரிக்காவுக்கு வேறு வழியில்லாமல் போனது. அமெரிக்கா தனது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட பிறகே ஈரான் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

தற்போது நடைமுறையில் உள்ள இரண்டு வார காலத் தற்காலிகப் போர் நிறுத்தம் வரும் புதன்கிழமையுடன் முடிவடைகிறது. போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை.

பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஒரு நிரந்தரமான அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றன. இருப்பினும், முக்கியப் பிரச்சினைகளில் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படாததால் களத்தில் நிச்சயமற்ற சூழலே நீடிக்கிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதிக்கும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் இந்த பதற்றம், உலக நாடுகளின் கவனத்தை ஈரான் பக்கம் திருப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here