12 ஆயிரம் பேருக்கான அன்னதானத்துடன் !!! அஷ்டதச புஜ காளியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்

(ரெ. மாலினி)

மலாக்கா,

வண்ணவண்ண விளக்குகளில் பிரமாண்ட அலங்காரங்கள், 100 ஓமகுண்டங்கள், 140 குருமார்கள், 12 ஆயிரம் பேருக்கு அன்னதானம் என கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையில் ஸ்ரீ அஷ்டதச புஜ காளியம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம், எதிர்வரும் ஜூன் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 முதல் 10.00 மணி வரை கோலாகலமாக நடைபெறவுள்ளது.

ஆலய ஸ்தாபகர், தேவி உபாசகர், அருள் வாக்கு சித்தர், அருள் வாக்கு வித்தகர் என பரிவுடன் போற்றப்படும் “அம்மா” சண்முகநாதன் சுவாமிகளின் 11 ஆண்டுகள் கனவினை நினைவூட்டும் தருணமாக இந்த மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கடந்த ஜூன் 1ஆம் தேதி தொடங்கி, ஆலயத்தில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை மந்திர ஜெபங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கிரியா கால ஆரம்பத்திற்கு முன் வேதபாராயணம், மங்கள இசை, பூஜை நேரங்களில் பூர்ணாஹூதி, விசேஷ தீபாராதனை, லலிதா சகஸ்ர நாம அர்ச்சனை, திரிசதி அர்ச்சனை, பத்ரகாளி சகஸ்ர நாமம், திருமுறை, அருணகிரிநாத சுவாமிகளின் அருட்பாடல்கள், அபிராமி அந்தாதி, நவரத்ன மாலை, நாத, கீத, தாள, நிர்த்தன உபசார சமர்ப்பனங்கள், ஆசியுரைகள், அருளுரைகள் மற்றும் கிரியா கால விளக்க உரைகள் என பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு மற்றும் மலேசிய திருநாட்டு சாதகர்கள், ஆச்சாரியர்கள் மற்றும் குருமார்கள் தலைமையில் அனைத்து நிகழ்வுகளும் மிக சிறப்பாக நடைபெறுகின்றன. பார்வையாளர்களை கவரும் வகையில், யாகசாலை கட்டுமானமும் அலங்காரங்களும் தமிழ் நாட்டுப் பாணியில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.

மலேசிய நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக இவ்வளவு பெரிய அளவில் கோலாகலமாக நடைபெற உள்ள இந்த மகா கும்பாபிஷேக நிகழ்வை காண அனைவரும் திரண்டு வருமாறு “அம்மா” சண்முகநாதன் சுவாமிகளும், இறைச் சேவையில் ஆலயத் தலைவர் ஜெகனும் மற்றும் கோவில் நிர்வாகமும் அன்புடன் அழைக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here