கோலாலம்பூர்:
சிங்கப்பூரும் மலேசியாவும் ஒன்றோடு ஒன்று போட்டி போடாமல் இணைந்து செயல்பட்டு கூட்டாக போட்டித்தன்மையை மேம்படுத்தி அதிகளவு முதலீடுகளை ஈர்க்கவேண்டும் என்று சிங்கைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
உலகப் பொருளியலின் இயந்திரமாகத் தொடர்ந்து ஆசியா விளங்குகிறது. பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் ஆசியாவில் முதலீடுகளைப் பரந்த அளவில் செய்ய விருப்பப்படுவதால் இந்த முதலீடுகளை ஈர்க்க மற்ற நாடுகளும் போட்டி போடுகின்றன.
எனவே, சிங்கப்பூரும் மலேசியாவும் கூட்டாகச் சேர்ந்து பொருளியல் தளத்தை விரிவுபடுத்தி இருநாட்டு மக்களுக்குப் பலன்களை விளைவிக்கும் வழிகளை ஆராயவேண்டும் என்று வோங் தெரிவித்தார்.
புருணைக்கும் மலேசியாவிற்கும் அவர் மேற்கொண்ட இருநாள் அறிமுகப் பயணத்தின் முடிவில் நேற்று செய்தியாளர்களை கோலாலம்பூரில் சந்தித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
ஒரு நாட்டின் பிரதமரின் பணிகளில் வெளியுறவுத் தொடர்புகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்று விளக்கிய வோங், பங்காளித்துவங்களை வலுப்படுத்துவது, தொடர்புகளை உருவாக்குவது போன்ற பணிகளைத் தொடரவேண்டும் என்றார். அதனால் நாம் செயல்படும் தளத்தை விரிவுபடுத்தி மக்களுக்குப் பலன்களைக் கொண்டுசேர்க்கலாம் என்றார் அவர்.
இருதரப்பும் இணைந்து செயல்படுவதற்கான நல்லுறவைப் பேணவும் தலைமைத்துவ நிலையில் உறவுகளை நிலைநாட்டவும் இந்த அறிமுகப் பயணங்கள் அவசியம் என்றும் ஒட்டுமொத்த உறவுகளுக்கு அது அடித்தளமிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
புருணை, மலேசியா ஆகிய இரு நாடுகளுடனும் சிங்கப்பூர் இன்னும் பல வழிகளில் இணைந்து செயல்பட முடியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மலேசியாவுடன் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் சில விவகாரங்களுக்கு உடனடியாகத் தீர்வுகள் காணப்படவில்லை என்றாலும்,
தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.




















