பினாங்கில் இனவெறிக் கொண்ட வீட்டுவசதி தள்ளுபடியை சாடிய வழக்கறிஞர்

மடானி வீட்டு உரிமை பிரச்சாரத்தின் (MOC) கீழ் இந்திய முஸ்லிம்களுக்கு பிரத்தியேகமாக வீடுகளில் 5% தள்ளுபடி வழங்கும் பினாங்கு அரசாங்கத்தின் முடிவை மனித உரிமை வழக்கறிஞர் ஒருவர் விமர்சித்துள்ளார். இது பாரபட்சமானது என்பதோடு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறியுள்ளார். இந்தக் கொள்கை ஒரு குறிப்பிட்ட இனம், மதத்தை நியாயமற்ற முறையில் ஆதரிப்பதாகவும், இது கூட்டாட்சி அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள சமத்துவக் கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் ராஜேஷ் நாகராஜன் கூறினார். இந்த முயற்சி இனங்களுக்கிடையே  பிளவினை ஏற்படுத்தும் என்பதோடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.

பினாங்கு மாநில அரசு இஸ்லாமிய நம்பிக்கை கொண்ட இந்திய முஸ்லிம்களுக்கு வெகுமதி அளிப்பதும், கிறிஸ்தவ, பௌத்த, இந்து, பஹாய் அல்லது சீக்கிய நம்பிக்கை கொண்டவர்களைத் தண்டிப்பதும் ஏன்? இது பாகுபாடு ஏன் என்று எனக்குத் தெரியவில்லை என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார். மதம், இனம் அல்லது வம்சாவளியைப் பொருட்படுத்தாமல், சட்டத்தின் முன் அனைத்து நபர்களும் சமமானவர்கள். சமமான பாதுகாப்பிற்கு உரிமை உண்டு என்பதை உத்தரவாதம் செய்யும் கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவுகள் 8(1), 8(2) ஐ அவர் மேற்கோள் காட்டினார்.

மாநில வீட்டுவசதி,  சுற்றுச்சூழல் குழுத் தலைவர் எஸ். சுந்தரராஜூவை ராஜேஷ் சாடியதோடு, இது ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார். பொது நிதிகள், அரசு ஆதரவுடன் கூடிய முயற்சிகள் அனைத்து மலேசியர்களுக்கும் சமமாக பயனளிக்க வேண்டும், மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்க பயன்படுத்தப்படக்கூடாது. இது தெளிவாக ஒரு இனவெறி கொள்கை என்று அவர் கூறினார்.

டிஏபி தலைமையிலான பினாங்கு அரசாங்கம் உடனடியாக இந்த முயற்சியை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் இனம்,மதப் பிளவுகளை ஆழப்படுத்தக்கூடிய கொள்கைகளுக்கு எதிராக எச்சரித்தார். ஜூன் 1, 2025 முதல் மே 31, 2026 வரை MOC இன் கீழ் குடியிருப்பு, வணிக அலகுகளை வாங்கும் இந்திய முஸ்லிம்களுக்கு பினாங்கு அரசாங்கம் தள்ளுபடி வழங்கும் என்று நேற்று பெர்னாமா செய்தி வெளியிட்டது.

புதன்கிழமை மாநில திட்டமிடல் குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இந்த முயற்சி, வீட்டு உரிமையை அதிகரிப்பது, மூலோபாய புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதை ஆதரிப்பதோடு மிகவும் உள்ளடக்கிய போட்டித்தன்மை வாய்ந்த சொத்துத் துறையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சுந்தரராஜூ கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here